தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அழுத்தத்தால் ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டி வரும் : ஶ்ரீதரன்

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அழுத்தங்களினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக மத்திய மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஶ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

கூட்டணித் தலைவர்கள், ஆயிரம் ரூபாவைக் கடந்து அதற்கும் அதிகமான தொகையைப் பெற்றுக் கொடுக்க குரல் கொடுப்பார்கள் என்றும் ஶ்ரீதரன் மேலும் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றின் சமகால அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளருக்கு 1000 ரூபா வரை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் முன்மொழிந்துள்ளார். இது இறுதியான வார்த்தை அல்ல. இதில் மயக்கம் இருக்கிறது. இதனை அழுத்தமாக சொல்லவில்லை. தோட்டத் தொழிலாளருக்கு சம்பளம் வழங்க ஒரு முறை இருக்கிறது. தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தே சம்பளம் குறித்த இணக்கம் காணப்படுகிறது. தோட்டத் தொழிலாளர்களின் கொடுப்பனவு தனியார் துறைசார்ந்த கொடுப்பனவாக இருக்கிறது. அரசாங்க ஊழியர் ஒருவரின் சம்பளம் குறித்து பிரதமரோ, நிதியமைச்சரோ இதனைக் கூறலாம். ஆனால், தோட்டத் தொழிலாளிக்கு ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்று பிரதமர் எந்த அடிப்படையில் கூறியிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆகவே இதனை நம்பக்கூடிய கூற்று அல்ல. ஆயிரம் ரூபாவை விட அதிகமாக சம்பளம் வேண்டும் என்பதற்காக தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் இப்போதே குரல் எழுப்பத் தொடங்கிவிட்டார். இவ்வாறு முன்வைக்கும் அழுத்தத்தின் காரணமாக நிச்சயமாக தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தைப் பெறுவதற்கான போராட்டங்களையும் முன்னெடுப்போம். கோரிக்கைகளையும் முன்வைப்போம்.” என்று மத்திய மாகாண முன்னாள் உறுப்பினர் ஶ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles