இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், கிளிநொச்சியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்துக்குச்சென்று புலிகளை நினைவுகூர்ந்தமை அரசமைப்பைமீறும் செயலாகும் என பொங்கி எழுந்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர.
அத்துடன், நாட்டை பிளவுபடுத்தமாட்டோம் என்ற உறுதிமொழியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களிடம் மீண்டும் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சரத் வீரசேகர கூறியவை வருமாறு,
“ இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், முதன்முறையாக கிளிநொச்சியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்துக்கு சென்று, புலிகளுக்கு மலர்தூவி நினைவேந்தல் நடத்தியுள்ளார்.
இந்நாட்டை பிளவுபடுத்தவே புலிகள் போராடினர், எனவே, அந்த பயங்கரவாதிகள் மரணித்த இடத்துக்கு சென்று மலர் வைத்து நினைவேந்தல் நடத்துகின்றார் எனில் அவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாட்டை பிளவுபடுத்தும் நிலைப்பாட்டிலேயே உள்ளனர் என்பதையே புலப்படுத்துகின்றது.
நாட்டை பிளவுபடுத்தும் வகையிலான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமானம் செய்துள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்கையில் சிறிதரன் எம்.பி., எவ்வாறு மாவீரர் துயிலும் இல்லத்துக்குச்சென்று, புலிகளை கௌரவித்து நினைவேந்தல் நடத்த முடியும்?
நாட்டை பிளவுபடுத்தும் நிலைப்பாட்டில்தான் அவர்கள் (கூட்டமைப்பினர்) உள்ளனர். எனவே, பிளவுபடுத்தமாட்டோம் என்ற உறுதிமொழியை அவர்களிடம் மீள பெறவேண்டும்.” – என்றார்.
