திருகோணமலை சம்பவம்: ஜனாதிபதி தலைமையில் குழு அமைக்குமாறு வலியுறுத்து!

 

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு குழுவொன்று உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு,

“ திருகோணமலை ஜயந்தி போதிராஜ விகாரையில் நடந்த சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு சாதகமானதா? பாதிப்பானதா? 1951ஆம் ஆண்டில் அந்த விகாரை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2010 இல் பௌத்த விவகாரங்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2014 இல் புனித பூமிக்கான உரித்து கிடைத்துள்ளது.

ஏதோவோரு பிரச்சினை உருவாகின்றது. அந்த பிரச்சினையில் புத்தர்சிலையை கொண்டு செல்லும் தரப்பாக பொலிஸார் மாற்றப்பட்டுள்ளனர். புத்தர் சிலையை அகற்றுவதற்கு பொலிஸாருக்கு உள்ள உரிமை என்ன? தவறை புரிந்துகொண்டு மீண்டும் அந்த புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்துள்ளனர்.

பௌத்த மதத்திற்கு வழங்கப்படும் முன்னுரிமை தொடர்பில் நாம் அனைவரும் அறிவோம். அதேபோன்று மற்றைய மதங்களுக்கு வழங்கப்படும் உரிய கௌரவம் மற்றும் இடம் என்பன வழங்கப்பட வேண்டும்.

எனவே, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தேசிய ஒருமைப்பாட்டு குழுவொன்றை அமைக்க வேண்டும். ஜனாதிபதி அதனை செயற்படுத்த வேண்டும். இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும் போது இதனை பொலிஸாரிடம் ஒப்படைத்து பலனில்லை. நாட்டுத் தலைவர் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.

இது சாதாரண பிரச்சினையல்ல என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஏனைய மதங்களில் இது போன்ற பிரச்சினைகள் வரும் போதும் நாங்கள் இவ்வாறு செயற்பட்டோம். சிறந்த பௌத்தர்கள் போன்றே நடந்து கொண்டோம். ஆனால் தற்போது சில குழுக்கள் பௌத்த மதத்தை திரிபுப்படுத்துகின்றன. இந்த நிலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு நான் ஜனாதிபதிக்கு கூறுகின்றேன்.

ஜனாதிபதி தீயை உருவாக்கக் கூடாது. தீயை அணைப்பதற்கே நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பு பிரிவினர் இதுபோன்ற விடயங்களில் தலையிடாது. நாட்டின் ஜனாதிபதி இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிச் செல்லாத வகையில், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மகாநாயக்க தேரர் மற்றும் இந்த பிரச்சினையில் தொடர்புபட்டுள்ள சகல குழுக்களையும் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுங்கள். பிரச்சினையில் இருந்து நழுவிச் செல்வது தலைமைத்துவம் அல்ல. இதனை தீர்க்க வேண்டும். நாட்டில் பல இடங்களிலும் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகின்றன.

ஆகவே இவற்றுக்கு முறையான தீர்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை, உண்மையான மக்கள் இறையாண்மை, நாட்டின் சுதந்திரத்தை பலப்படுத்தும் சாதகமான செயற்பாடுகளுக்கு எதிர்க்கட்சி கூட ஒத்துழைப்பை வழங்க தயார். ஆனால் விகாரைகளுக்குள் சென்று செயற்படுவதற்கு பொலிஸாருக்கு உரிமை கிடையாது. இதனால் இந்தப் பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

Related Articles

Latest Articles