மாத்தறை வெலிகம – பெலேன பகுதியில் இன்று அதிகாலை சிலரை கைது செய்வதற்கு சென்ற பொலிஸார்மீது மேற்கொள்ளப்பட்டுள்ள துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
கொழும்பு குற்ற புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் 46 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே உயிரிழந்துள்ளார். உப பொலிஸ் பரிசோதகர் காயம் அடைந்துள்ளார். இவர் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
சிறையில் உள்ள ஹரக் கட்டா என்ற பாதாள குழு உறுப்பினருடன் தொடர்பைபேணிய சிலரை கைது செய்வதற்காக கொழும்பு குற்றவியல் பிரிவு அதிகாரிகள் அதிகாலை வேனில் சென்றுள்ளனர்.
பெலேன பகுதியில் உள்ள ஹோட்டலொன்றுக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான நபரொருவர் இருந்துள்ளார். பொலிஸ் அதிகாரிகள் வாகனத்தை நிறுத்தி, இறங்கியுள்ளனர். அவ்வேளையிலேயே ஹோட்டல் பகுதியில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு பதிலுக்கு சூடு நடத்தினர்.
இதன்போது குறித்த குழுவினருக்கும், பொலிஸாருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள் வாகனத்தில் ஏறி, காயம் அடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்க்க தயாராகினர்.
அவ்வேளையில் வெலிகம பொலிஸாரின் இரவு ரோந்து வாகனம் அப்பகுதிக்கு வந்துள்ளது. இதன்போது அங்கு இருந்த வேன்மீது அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
அந்தவேனில் கொழும்பு குற்றவியல் பிரிவு அதிகாரிகள் இருப்பது தெரியாமல்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு மத்தியிலேயே பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார்.
எனினும், குற்றக்குழு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்தாரா அல்லது பொலிஸார் நடத்திய துப்பாககிச்சூட்டில் உயிரிழந்தாரா என்பது இன்னும் உறுதியாக தெரியவரவில்லை. விசாரணைகள் தொடர்கின்றன என்று பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், வெலிகம பொலிஸாருக்கு அறிவித்துவிட்டா அதிகாரிகள் அங்கு சென்றனர் என்பது பற்றியும் உறுதியான தகவல் வெளியாகவில்ல.
சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் தொடர்கின்றன.