தெற்கு அரசியலில் குவியும் கூட்டணிகள்: மலையக கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

இலங்கை அரசியலில் என்றுமில்லாதவாறு இம்முறை கூட்டணிகள் உதயமாகி, அரசியல் களத்தில் குவிந்துவருகின்றன. தேசிய மட்டத்திலான தேர்தலை இலக்குவைத்தே இதற்கான நகர்வுகள் இடம்பெற்றுவருகின்றன.
மறுபுறத்தில் கட்சிதாவுதல், காலைவாருதல், குதிரைபேரம் என தேர்தல் காலத்துக்கே உரித்தான சம்பவங்களும் அரங்கேறிவருகின்றன. இதனால் தெற்கு அரசியல் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

எந்த தேர்தல் முதலில்?

முதலில் நடைபெறும் தேர்தல் எது என்பதே அனைவர் மத்தியிலும் தற்போது எழுந்துள்ள மில்லியன் டொலர் பெறுமதியான கேள்வியாகும்.

அரசமைப்பின் பிரகாரம் தற்போதைய கால எல்லைக்கமைய ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் எதை வேண்டுமானாலும் முதலில் நடத்தக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதமே ஜனாதிபதி தேர்தல் கடைசியாக நடத்தப்பட்டது. ஜனாதிபதிக்குரிய பதவி காலம் ஐந்தாண்டுகள் என்பதால் 2024 செப்டம்பர் 18 மற்றும் ஒக்டோபர் 10 இற்கு இடையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். ( ஜனாதபதி தேர்தலை பிற்போடுவதற்குரிய ஏற்பாடுகள் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சாத்தியப்படாது என்பதால் தேர்தல் நடைபெறுவது உறுதி)

2025 வரை நாடாளுமன்றத்தின் பதவி காலம் இருந்தாலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்து தீர்மானமொன்றை நிறைவேற்றும்பட்சத்தில் நாடாளுமன்றத்தை ஜனாதிபதியால் கலைக்க முடியும்.

நாடாளுமன்றத்தின் பதவிகாலம் இரண்டரை வருடங்களை கடந்துள்ளதால் இதற்கு சட்டரீதியாக எவ்வித தடையும் இல்லை.
ஆனால் முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டால்கூட ஜனாதிபதி தேர்தலையும் ஒக்டோபர் மாதத்துக்குள் நடத்தியாக வேண்டும். ஆக முதலில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால் குறுகிய காலப்பகுதிக்குள் இரு தேசிய தேர்தல்களை இலங்கை மக்கள் சந்திக்க நேரிடும்.

ஜனாதிபதி தேர்தலுக்குதானே பாதீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, முதலில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டாதல் அதற்கு நிதி எப்படி என்ற கேள்வியும் எழக்கூடும். நாடாளுமன்றத்தில் குறைநிரப்பு பிரேரணையொன்றை நிறைவேற்றி அதற்கான நிதியை பெற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடும் உள்ளது.

குவியும் கூட்டணிகள்

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி , கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளையும், அமைப்புகளையும், தனிநபர்களையும் அதிகரிப்பதற்கான நகர்வுகளில் முழுவீச்சுடன் செயற்பட்டுவருகின்றது.

மறுபுறத்தில் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் தமது கூட்டணியை விஸ்தரித்தே ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள உத்தேசித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் பரந்தப்பட்ட கூட்டணியை அமைப்பதற்கான நகர்வுகளில் ஈடுபட்டுவருகின்றது. வரலாற்றில் மிகப்பெரிய கூட்டணி இம்முறை உதயமாகும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

நிமல்லான்சா, சுசில் பிரேமஜயந்த உட்பட மொட்டு கட்சியில் இருந்து விலகிய சில எம்.பிக்கள் இணைந்து புதிய கூட்டணி எனும் பெயரில் கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளனர். இக்கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சியுடன் சங்கமிக்கும்.

அதேபோல ஐக்கிய தேசியக் கட்சியும் பரந்தப்பட்ட கூட்டணிக்கான அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதற்கான பொறுப்பு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சம்பிக்க ரணவக்க தலைமையிலும், மைத்திரிபால சிறிசேன தலைமையிலும், விமல் வீரவன்ச தலைமையிலும், ரொஷான் ரணசிங்க தலைமையிலும் ஏற்கனவே கூட்டணிகள் உதயமாகியுள்ளன.

இவ்வாறு இலங்கை அரசியலில் கூட்டணிகள் குவிந்தாலும், முதலில் ஜனாதிபதி தேர்தலொன்று நடைபெறும் பட்சத்தில் அதில் மும்முனைப்போட்டியே நிலவக்கூடும். மேற்படி கூட்டணிகளில் சில தரப்புகள் பிரதான வேட்பாளர்கள் பக்கம் சாயக்கூடும்.

1994, 1999, 2005, 2010, 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின்போது பிரதான கட்சிகள் கூட்டணி அமைத்தே களம் கண்டுள்ளன. சிறு கட்சிகள் அவற்றின் முதுகில் அரசியல் சவாரி செய்யும் போக்கே காணப்படுகின்றது. ஏனெனில் பிரதான கட்சிகளுடன் கூட்டு வைத்தால்தான் நாடாளுமன்ற தேர்தலில் (விகிதாசார தேர்தல் முறைமையின்கீழ்) பாரிய சவால்கள் இன்றி நாடாளுமன்றம் தெரிவாகும் சூழ்நிலைக் காணப்படுகின்றது.

2 ஆவது விருப்பு வாக்கு!

இலங்கையில் இதுவரை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின்போது பிரதான இரு வேட்பாளர்களில் ஒருவர் , செல்லுபடியான வாக்குகளில் 50 வீதத்துக்கும் மேல் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இதனால் 2ஆவது விருப்பு வாக்கை எண்ணுவதற்குரிய சூழ்நிலை உருவாகவில்லை.

எனினும், இம்முறை அரசியல் களம் மாறுபட்ட கோணத்தில் காணப்படுகின்றது. 3 சதவீத வாக்குகள் என முத்திரை குத்தப்படும் தேசிய மக்கள் சக்தி எழுச்சி பெற்றுள்ளதையும், அதன் வாக்குவங்கி அதிகரித்துள்ளதையும் பிரதான கட்சிகள்கூட வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளன.

இலங்கையில் ஏனைய தேர்தல்களைப்போல அல்லாமல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மூவருக்கு விருப்பு வாக்குகளைப் பயன்படுத்த முடியும்.

ஜனாதிபதி தேர்தலில் 2 இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற பட்சத்தில் – A,B,C,D,E என வைத்துக்கொள்வோம்.

A என்பவரே வாக்காளரின் முதன்மை தேர்வாக இருக்கும் பட்சத்தில் A என்பவருக்கு முன்னால் 1 என இலக்கத்திலும் – 2, 3 ஆம் விருப்பு வாக்குகளைப் பயன்படுத்த விரும்பினால் தாம் விரும்பு வேட்பாளர்களுக்கு 2, 3 என அடையாளமிட்டு விருப்பு வாக்குகளைப் பயன்படுத்தலாம்.

உதாரணம்.

A 1
B 2
C 3

2, 3 ஆம் விருப்பு வாக்குகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. ஒரு வேட்பாளருக்குதான் வாக்களிக்க, வாக்காளர் விரும்புவாரெனில் வாக்கு சீட்டில் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் X அல்லது 1 என அடையாளமிட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படும்.

விருப்புகளை அளிக்க விரும்புபவர்கள் மூன்று வேட்பாளர்களுக்கும் X X X என அடையாளமிட்டால் அந்த வாக்கு செல்லுபடியாகாது. எனவே, 2,3 ஆம் விருப்பு வாக்குகளை பயன்படுத்த விரும்புபவர்கள் 1,2,3 என அடையாளமிடுவதே சிறந்த நடைமுறையாக கருதப்படுகின்றது.

1 என்பதை குறிக்காமல் 2,3 என அடையாளப்படுத்தினால்கூட அது செல்லுபடியற்ற வாக்காகிவிடும்.

ஜனாதிபதி தேர்தலில் 2ஆவது விருப்பு வாக்கு கணக்கிடும் முறை பற்றி ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளேன். தேர்தல் நெருங்கும்வேளையில் அதை மீள்பதிவு செய்யலாம்.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு தொழிலாளர் தேசிய முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி என்பன அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
இதற்கான ஆரம்பக்கட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தற்போது அரச பங்காளிக்கட்சியாக உள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேசம்கரம் நீட்டியுள்ளது. எனினும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்னும் அக்கட்சி முடிவெடுக்கவில்லை. மாவட்ட மட்டத்திலான கலந்துரையாடல் இடம்பெற்றுவருகின்றது. எப்போதும் வெற்றிக்குதிரைக்கே பந்தயம் கட்டும் என அரசியல் களத்தில் விமர்சிக்கப்படும் காங்கிரஸ், பிரதான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்னரே முடிவை அறிவிக்கும் என தெரியவருகின்றது.

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழர் ஒருவரை பொதுவேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் வாக்கு வங்கி உள்ள தமிழ் தேசியக் கட்சிகள் தென்னிலங்கையில் பிரதான வேட்பாளர் ஒருவரையே ஆதரிக்ககூடும் என அறியமுடிகின்றது.

சிலவேளை முதலில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால்கூட சிலவேளை நான்கு முனை போட்டி நிலவக்கூடும். அவ்வாறு நடந்தால் தொங்கு நாடாளுமன்றம் உருவாகக்கூடிய சூழ்நிலையும் காணப்படுகின்றது.

ஆர்.சனத்

Related Articles

Latest Articles