கலஹா, தெல்தோட்டை கல்லந்தென்ன கீழ் பிரிவிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் வண்ணக் கல்லொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பெறுமதியான இரத்தினக்கல்லாக இருக்கலாம் என பிரதேச மக்கள் நம்புகின்றனர்.
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் தாக்கத்தால் கோவிலுக்கு அருகாமையில் மண்சரிவு ஏற்பட்டது.
அப்பகுதியில் பல வண்ணங்களில் கல்லொன்று மின்னுவதை நேற்று அவதானித்த பிரதேச வாசி ஒருவர், வழங்கிய தகவலுக்கமையவே , பிரதேச மக்களால் இரத்தினக் கல் என நம்மப்படும் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
மண்சரிவில் மேற்படி கோவில் உட்பட பல வீடுகள் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி கோவிலை புனர் நிர்மானம் செய்வதற்கு தோட்ட மக்கள் 2010 ஆம் ஆண்டு முதல் நிதி சேகரித்து வந்தனர். பல சிரமங்களுக்கு மத்தியில் எதிர்வரும் மார்ச் மாதத்தில் கும்பாபிஷேகம் செய்வதற்கு திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் இயற்கை அனர்த்தில் குறித்த கோவில் சேதமடைந்ததால் தோட்ட மக்கள் கவலை அடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலஹா பொலிஸார் குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த கல் இரத்தினக்கல்லா அல்லது தொல்லியல் பெறுமதிமிக்கதா என்பது பற்றி உரிய தரப்பினர் ஆராய்ந்த பின்னரே அது பற்றி உறுதியாக தெரியவரும்.
அதிகாரிகளின் ஆய்வு அறிக்கை வெளிவந்த பின்னரே விடயம் தெரியவரும். மேற்படி சபையின் அதிகாரிகள் குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர் என தெரியவருகின்றது.உரிய மதிப்பாய்வு அறிக்கைவரும்வரை அப்பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கம்பளை, கலஹா நிருபர்கள்










