தேசிய கொள்கைத் திட்டத்தின் அடிப்படையிலேயே சர்வக்கட்சி அரசு குறித்து முடிவு!

” தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவத் தயாராக உள்ளனர். அதற்கான உத்வேகத்தை அதிகாரப் பகிர்வு அளிக்கும்’ என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

ஜனாதிபதி முன்வைக்கக் கூடிய தேசிய கொள்கைத் திட்டத்தின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வகட்சி அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

” பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திரக் கட்சியிலிருந்து சுயாதீனமான உறுப்பினர்களுடன் இணைந்து எமது கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தது.

சர்வகட்சி ஆட்சியை உருவாக்குவதை நோக்காகக் கொண்டே இத்தீர்மானத்தை எடுத்திருந்தோம். பொருளாதாரத்தை மீண்டும் சரியான பாதையில் கொண்டு செல்வதற்கும் மக்களை ஒன்றிணைப்பதற்கு சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் அமைப்பதே ஒரேயொரு வழியாக இருந்தது. இதனால்தான் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு தெரிவிக்க நாம் முடிவெடுத்தோம்.

பொதுஜன பெரமுனவின் வாக்குகளால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது, ​​அக்கட்சிக்கு வெளியில் இருந்து ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் அது நிகழவில்லை. தற்போதைய அமைச்சரவையைப் பார்த்தால் முன்னைய அரசாங்க காலத்தைப் போன்றே காணப்படுகிறது. பாரிய மாற்றங்கள் எதுவும் தென்படவில்லை.

அண்மையில் நாம் ஜனாதிபதியைச் சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிய விடயங்களை எடுத்துக் கூறியிருந்தோம். நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தேசியக் கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை ஆதரிக்கத் தயாராக இருப்பதாகவும் அவருக்குத் தெரிவித்தோம்.” – எனவும் சாணக்கியன் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles