“நாட்டின் தேசிய பாதுகாப்பானது புலிகள் அமைப்பு இருந்த காலத்தைவிடவும் பயங்கரமானதொரு நிலைக்கு சென்றுள்ளது. ஜே.வி.பி. கிளர்ச்சி இடம்பெற்ற 88,89 காலப்பகுதியை நோக்கி தேசிய பாதுகாப்பு நகர்ந்துக்கொண்டிருக்கின்றது.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில்
நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘மக்கள் நீதிமன்றத்துக்குள் சுட்டுக்கொல்லப்படுகின்றனர். பொலிஸார் முன்னிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகின்றது.
வீடுகளுக்குள் புகுந்து சுட்டு படுகொலை செய்யும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. உயிரிழப்பவர்கள் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்கள், பாதாள குழுவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி கொலைகளை நியாயப்படுத்துவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது.
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கே மக்கள் அரசாங்கத்தை தெரிவுசெய்கின்றனர். எனவே, கொலை செய்யப்படுபவர்கள் யாரென்பது முக்கியம் அல்ல. சட்டத்தக்கு புறம்பாக சென்று எவரும் செயற்பட முடியாது.
323 கொள்கலன்கள் தொடர்பில் முதன்முதலில் தகவலை வெளியிட்ட டான் பிரசாத் வீடு புகுந்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆனால் அது சாதாரணமாக மூடிமறைக்கப்பட்டது. இப்படியான கொலைகளின் பின்னணியில் அரசாங்கம் பாசிசவாத ஆட்சியை உருவாக்குவதற்கு முற்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.
பாசிசவாத ஆட்சியில் தமது எதிராளிகளை கட்டுப்படுத்த முடியாதபோது, அவர்களை இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் மூலம் கொன்றுவிட்டு பாசிசவாத ஆட்சியை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாடமெடுக்கப்படும் எனக் கூறியவர்கள் தற்போது மௌனம் காக்கின்றனர். தேசிய பாதுகாப்பு வீழ்த்தப்பட்டுள்ளது. புலிகள் காலத்தில்கூட இல்லாத நிலையே தற்போது காணப்படுகின்றது.” – என்றார்.