இரத்தினபுரி மாவட்டத்தில் பச்சை கொழுந்து ஒரு கிலோவின் விலை 105 ஆக இருந்த போதிலும் தற்பொழுது அதன் விலை 90 ரூபாவாக குறைந்து உள்ளது. இதனால் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் ஆயிரக்கணக்கில் பல கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கொவிட்-19 (கொரோனா) வைரஸ் நிலைமையின் பின்னர் இம்மாவட்டத்தில் 2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பச்சை கொழுந்து ஒரு கிலோ 120-, 105 ரூபாவுக்கிடையில் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களிடமிருந்து சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் பெற்று வந்தனர்.
எனினும் ஜூன் மாதம் முதல் கொழுந்தின் விலை ஒரு கிலோவிற்கு 90 ரூபாவுக்கும் 87 ரூபாவுக்கும் இடையில் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் அதிகளவு சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் வாழும் இரத்தினபுரி மாவட்டத்தில் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் சிறிய தேயிலை தோட்ட சூழலில் தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர்.
தேயிலை தொழிற்சாலைகளின் மூலம் கிடைக்கும் பணத்தில் தொழிலாளர்கள் சம்பளம், உர வகைகள் உட்பட உற்பத்திக்குத் தேவையான ஏனைய செலவுகளை சமாளிக்க வேண்டி உள்ளது. தேயிலைக் கொழுந்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் தமக்கு பல கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி இருப்பதாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் மேலும் தெரிவித்தனர்.