தேரவாத பௌத்தத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்குக் கொண்டு செல்வதற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுருக்கமான திரிபீடகத் தொகுப்புச் சபையினால் தொகுக்கப்பட்ட “சிங்கள தம்மசத்கனிப்கரண” என்ற புதிய நூலின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஏழு நூல்களைக் கொண்ட அபிதர்ம பிடகத்தின் ஒரு பகுதியாக இந்நூல் வெளிவந்துள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, நூலின் முதல் பிரதியை ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது, மஜ்ஜிம நிகாயா, சன்யுக்த நிகாயா, அங்கூத்தர நிகாயா, குத்தக நிகாயா, ஜாதக பாலி உட்பட தொடரின் ஒரு பகுதியாக ஏற்கனவே வெளியிடப்பட்ட ஐந்து நூல்களின் பிரதிகளையும் ஜனாதிபதி பெற்றுக்கொண்டார். இந்த நூல்களை ஜனாதிபதி அவர்கள் பிரபலப்படுத்தியதன் அடையாளமாக மகா சங்கத்தினருக்கு வழங்கி வைத்தார்.
நூல் வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து மகாசங்கத்தினருடனான சந்திப்பு இடம்பெற்றதுடன், தேரவாத பௌத்தத்தை சர்வதேச ரீதியில் பரப்புவதற்கு மேலும் பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சிங்களம், ஆங்கிலம், ஜேர்மன், பிரஞ்சு மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தொடர் நூல்களை மொழிபெயர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, இதன் மூலம் தேரவாத பௌத்தத்தை மேற்கத்திய நாடுகளிலும் பரப்ப முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
புத்தசாசன அமைச்சின் ஊடாக தேவையான ஏற்பாடுகளை ஒதுக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்கள் மூலம் மொழிபெயர்ப்புகளை வெளியிடுவதன் மூலம் பாவனையை அதிகரிக்க முடியும் என தெரிவித்த ஜனாதிபதி, இந்த நடவடிக்கைகளை முறையாக முன்னெடுப்பதற்காக புத்தசாசன அமைச்சுடன் இணைந்து தனியான நிலையமொன்றை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் விளக்கினார்.
அபிதர்ம பிடாகயத்தைப் பாதுகாப்பதற்காக தனியான அபிதர்ம நிலையத்தை அமைப்பது தொடர்பில் தற்போது மூன்று அத்தியாயங்களைச் சேர்ந்த மகாசங்கத்தினருடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருவதாகவும் அதன் எதிர்கால பணிகளுக்காக குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்தார்.
தேரவாத பௌத்த மதத்தைப் பாதுகாக்கும் மகா விகாரையின் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் நாலந்தா பல்கலைக்கழகத்தைப் போன்று மகாவிகாரை பல்கலைக்கழகத்தையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
