ஜனாதிபதியின் திருகுதாளங்களுக்கு துணைபோகாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்தல்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய ரவூப் ஹக்கீம் கூறியவை வருமாறு,
” கல்முனையில் தமிழ் பிரதேச செயலகம், முஸ்லிம் பிரதேச செயலகம் என வைத்துக்கொண்டு அதற்கு ஒரு கணக்காளரை நியமிக்கவில்லை என பாரிய குற்றச்சாட்டை சித்தார்த்தன் முன்வைத்திருந்தார். இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அங்குள்ள கிராம சேவகர் பிரிவுகளின் எல்லைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும்.
70 வீதம் இருக்கின்ற முஸ்லிம் மக்களுக்கு 29 கிராம சேவகர் பிரிவுகளும், 30 வீதம் இருக்கின்ற தமிழர்களுக்கும் 29 கிராம சேவகர் பிரிவுகளாக கிராம சேவகர் எல்லைகள் பிரிக்கின்ற விவகாரத்திலும் அநீதி நடந்துள்ளது. எனவே , பாரபட்சம் இல்லாத எல்லை மீளமைப்பு இடம்பெற வேண்டும். நாம் ஒன்றிணைந்து இதற்கு சாதாரண தீர்வை பெற முயற்சிப்போம்.
அதேவேளை, பிற்போடப்பட்டுள்ள தேர்தல்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் கேட்டுக்கொள்கின்றேன். ஜனாதிபதியின் திருகுதாளங்களுக்கு துணைபோகாமல் தேர்தல்களை நடத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட துறைசார் அமைச்சர் என்ற வகையில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் கேட்கின்றேன்.” – என்றார் ஹக்கீம்.