உள்ளாட்சிமன்ற தேர்தலுக்கு வேட்புமனு கோரப்பட்டுள்ள நிலையில், தேர்தலை பிற்போடுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தலுக்காக ஒதுக்கப்படும் நிதியை தனது அமைச்சுக்கு வழங்கினால், விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் நெல்லைக் கொள்வனவு செய்ய முடியும் எனவும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
” உள்ளாட்சிமன்ற தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா செலவாகும் என தேர்தல் ஆணைக்குழு மதிப்பிட்டுள்ளது. வேட்பாளர்களின் செலவுகளுடன் இந்த தொகை 40 பில்லியன் வரை அதிகரிக்கக் கூடும்.
மேற்படி நிதியை எமது அமைச்சுக்கு வழங்கினால் விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் நெல்லைக் கொள்வனவு செய்ய முடியும். எனவே தேர்தலை விட விவசாயிகள் உள்ளிட்ட சாதாரண மக்களின் நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் சிந்திக்க வேண்டும்.
நாம் தேர்தலை காலம் தாழ்த்தும் தரப்பினர் அல்லர். எனினும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தல் அல்ல. எனவே நெல் கொள்வனவிற்கு முன்னுரிமையளித்து , ஓரிரு மாதங்களுக்கு தேர்தலை காலம் தாழ்த்துவது காலத்திற்கு ஏற்ற தீர்மானமாகும். அரசியல் கட்சிகளே தேர்தலைக் கோருகின்றனவேயன்றி மக்கள் அதனைக் கோரவில்லை.
எனவே விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு முன்னுரிமையளிக்குமாறு ஜனாதிபதியிடமும் அமைச்சரவையிடமும் கோரிக்கை விடுத்திருக்கின்றேன்.” – என்றுள்ளது.