நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாளாக நவம்பர் 14 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அத்திகதியில் பெரும்பாலும் மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10 ஆவது சரத்துக்கமைய, தேர்தல் திகதியை நிர்ணயித்ததில் ஏற்பட்டுள்ள சட்ட சிக்கலே இதற்கு காரணம் எனக் கூறப்படுகின்றது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு கடந்த ஒக்டோபர் 4 முதல் ஒக்டோபர் 11 வரை வேட்புமனுக்கள் கோரப்பட்டு, ஏற்கப்பட்டிருந்தன.
வேட்புமனுக்கள் ஏற்கப்படும் நாளிலிருந்து ஐந்து வாரங்களுக்கு குறையாமலும், ஏழு வாரங்கள் தாண்டாத வகையிலும் தேர்தல் திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும் என சட்ட நிபுணர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கமைய வேட்புமனுக்கள் ஏற்கும் பணி முடிவடைந்த ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15ஆம் திகதியும், ஏழு வார கால அவகாசம் நவம்பர் 29ஆம் திகதியும் நிறைவடைகிறது.
எனவே, நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியாக அறிவிக்கப்பட்டுள்ள நவம்பர் 14ஆம் திகதி சட்டக் காலத்திற்கு இடம்பெறாததால், அன்றைய தினம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணானது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவும் அவதானம் செலுத்தியுள்ளது எனக் கூறப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சட்ட ஆலோசனைக்குப் பிறகு, நாடாளுமன்றத் தேர்தல் திகதி மாற்றப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், நவம்பர் 21 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் என நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் ஜனாதிபதி அறிவித்தார். தேர்தல் திகதி நவம்பர் 14 எனவும் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதியின் அறிவிப்பை பார்க்கும்போது, தேர்தல் திகதியில் மாற்றம் வராது என்றே தெரிகின்றது.










