நாடு அநுரவோடு என்றார்கள், ஆனால் இன்று நாட்டு மக்களின் வாழ்வோ இருளோடு என்ற நிலைக்கு நிலைமை சென்றுக்கொண்டிருக்கின்றது. ஜனநாயகமென்பது மெல்லென சாகடிக்கப்பட்டுவருகின்றது என்று புதிய ஜனநாயக முன்னணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் வேலுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘வேலை நிறுத்தப் போராட்டங்கள் தேவையில்லை, தமது கட்சியின்கீழ் உள்ள தொழிற்சங்கங்கள் கலைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். அதாவது இலங்கையில் இனி தொழிற்சங்கங்களுக்கு இடமில்லை என்ற மறைமுக செய்தியையே இதன்மூலம் அவர் வெளிப்படுத்துவதற்கு முற்பட்டுள்ளார். இது ஜனநாயகத்துக்கும், தொழிற்சங்க உரிமைகளுக்கும் விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தலாகும்.
தேசிய மக்கள் சக்தியினர் எதிர்க்கட்சியில் இருக்கும்போது எத்தனை தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுத்தனர்? சிலவேளை ஆட்சியை குழப்பும் வகையில்கூட அவர்களின் போராட்டங்கள் அமைந்திருந்தன.
அப்போதெல்லாம் தொழிற்சங்க உரிமைகள் தொடர்பில் கோஷம் எழுப்பியவர்கள், இன்று தொழிற்சங்கங்கள் தேவையில்லை என கூற விளைவது, ஜனநாயகத்துக்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தலாகும்.
இதற்கு இடமளித்தால் நாளை எதிர்க்கட்சிகள்கூட தேவையில்லை, தனிக்கட்சி ஆட்சிபோதும் என்ற அறிவிப்பைக்கூட விடுப்பதற்கு அவர்கள் துணியக்கூடும். இன்று ஊடகங்களைக்கூட வெளிப்படையாக விமர்சிக்கும் நிலைக்கு ஆட்சியாளர்கள் வந்துவிட்டனர். அவர்களின் உண்மை முகம் வெளிப்பட தொடங்கியுள்ளது.
எனவே, இரவில் விழுந்த குழியில் பகலில் விழக்கூடாது. ஜனநாயகம் மற்றும் தொழிற்சங்க உரிமைகளை மதிக்கும் சிலிண்டர் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.” – என்றார்.