தலவாக்கலை நகரிலுள்ள அனைத்து கடைகளையும் நாளை தினம் (5.2.2021) மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை வர்த்தகர்கள் சங்கத் தலைவர் கமல் சமரவீர தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை ரூபா 1000 ஆக உயர்த்துவதற்காக தோட்ட கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நாளைய தினம் (5.2.2021) நாடு தழுவிய ரீதியில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு நாட்டு மக்கள் அனைவரிடமும் அழைப்புவிடுத்திருக்கின்றது.
அந்தவகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், இ.தொ.கா தோட்டத் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் தலவாக்கலை லிந்துலை நகர சபைத் தலைவர் லெட்சுமன் பாரதிதாசனின் எழுத்துப்பூர்வ வேண்டுகோளின்படி மருந்தகம் தவிர நகரிலுள்ள அனைத்து கடைகளையும் மூடி பெருந்தோட்ட தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளோம் என்றார்.
அதேவேளை, கொட்டகலை நகர வர்த்தக சங்கமும் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
