பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது எமது பிரச்சனைக்கான தீர்வு அல்ல. ஆகக்குறைந்தது பொருளாதார பிரச்சினைக்கான தீர்வும் அல்ல என இலங்கை செங்கொடி சங்கத்தின் ஆலோசகர் மேனகா கந்தசாமி தெரிவித்தார்.
இலங்கை செங்கொடி சங்கத்தின் மேதின நிகழ்வும் வருடாந்த மகா நாடும் நேற்று (01) திகதி மஸ்கெலியாவில் நடைபெற்றது. அதில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதி என்பது கட்டாயமாக தாம் வழங்கும் கடனுக்கு பின்னால் ஒரு பெரிய பொதியை சுமக்க அனுப்பி வைக்கும். அதாவது இந்த நாட்டில் வழங்கப்படும் கடனை மீண்டும் பெற்று எடுப்பதற்காக எவ்வகையான துறைகளில் எமது செலவைக்குறைத்து வருமானத்தை எவ்வாறெல்லாம் அதிகரிக்கலாமோ அதை செய்யும். அதுதான் முதலாளித்துவக்கொள்கை. உச்ச இலாபத்தை அனுபவிக்கக்கூடிய வகையான விடயங்களை அது எங்களுக்கு அனுப்பும்.
அவ்வகையான ஒப்பந்தத்தில் நாம் கைச்சாத்திட்டால் மட்டுமே எமக்கு இந்த கடன் கிடைக்கும். எனவே நாம் இந்த கடனை எமது பொருளாதார தீர்வாக பார்க்க முடியாது.
எனவே இந்த மே தினத்தில் நாம் குறிப்பாக கூறுவது எந்தவொரு முறையான துறையோ அல்லது முறைசாரா துறையோ என்று இருக்கக்கூடாது. தொழிலாளர்கள் தலையிட்டு தொழிலாளர்களின் உழைப்பை வழங்கும் சகல துறைகளும் சட்ட ரீதிக்குள் உட்படுத்தப்பட வேண்டும் பாதுகாப்பு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த நாட்டில் முறைசாரா துறை இல்லாது ஒழிக்கப்பட வேண்டும் இதுவே எமது செங்கொடி சங்கத்தின் வேண்டுகோளாகும் என்றார்.
இந்நிகழ்வில் செங்கொடி சங்கத்தின் தலைவர் சிவசுந்தரம் செல்லையா,பொதுச் செயலாளர் ஆனந்தி சிவசுந்தரம்,பொருளாளர் விசுவாசம் இராஜலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
