நிறுவனங்களை மறு சீரமைப்பு செய்யும் திட்டத்தை ஜனாதிபதி முன் வைத்துள்ளதுடன் பெருந்தோட்டத்துறை மற்றும் மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் பிரதான உணவு கோதுமை மா என்பதால் அதன் விலை 300 ரூபாவை விட அதிகரித்துள்ளதால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 2,000 ரூபாயாகவாவது அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஏற்றுமதி மூலப் பொருட்களுக்கான நெருக்கடி காரணத்தால் பல்வேறு துறைகள் வீழ்ச்சியடைந்து சுமார் 10,000 இளைஞர்கள் தொழில் வாய்ப்பை இழந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அந்த துறைகளுக்கான மூலப் பொருட்களைகுறைந்த விலையில் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
பாண்விலை அதிகரித்து பேக்கரிகள் 60 விதமானவை மூடப்பட்டுள்ளன. ஒரு உணவுப் பார்சலின் விலை 500 ரூபாவாக அதிகரித்துள்ளது.வாகன விற்பனையாளர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். ஆடைத் தொழில் வீழ்ச்சியுற்றுள்ள நிலையில் சுற்றுலாத் துறையும் வீழ்ச்சி கண்டுள்ளது. நாட்டில் அமைதியற்ற நிலை காணப்படுவதால் உல்லாசப் பிரயாணிகள் இங்கு வருவதற்கு அச்சம் கொள்கின்றனர். இவற்றை நிவர்த்திக்கும் அதே வேளை, வெளிநாட்டுக் கொள்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
