‘பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா வரையில் சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாகவுள்ளோம்.” – என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று திகாம்பரம் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சமந்த வித்யாரத்ன,
” சபைக்கு வருவதற்கு முன்னர் நானும் தொழில் அமைச்சர் அணில் ஜயந்தவும் அமைச்சுகளின் அதிகாரிகளை அழைத்து வந்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினோம்.
குறிப்பாக ஜனாதிபதி தனது வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தார். தனியார் துறையின் சம்பளமும் அதிகரிக்கப்பட்டது.
அதற்கமைய தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமும் 1,700 ரூபா வரையில் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தோம்.
இதன்படி அரசாங்கம் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இதன்போது அவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளையும் எங்களிடம் கூறினர். இது கடினமானது என்ற வகையிலேயே கூறினர்.
வேறு சில பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடிய போது அவர்களுக்கு சம்பள அதிகரிப்பை செய்ய முடியுமாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
இந்த விடயத்தில் கூட்டாகவே தீர்மானம் எடுக்க வேண்டும். இது தொடர்பில் கூட்டு உடன்படிக்கைக்கு செல்ல வேண்டும். எவ்வாறாயினும் நாங்கள் வழங்கிய வாக்குறுதியை நிச்சயமாக நிறைவேற்ற தேவையான விடயங்களை மறுசீரமைத்து வருகின்றோம்.
இதனை கைவிட மாட்டோம். நிச்சயமாக இதனை நிறைவேற்றுவோம். நீங்கள் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குங்கள். இந்த சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாகும். ஏதேனும் தொழிற்துறையை பாதுகாக்க வேண்டும். அப்போதே தொழிலாளர்களும் பாதுகாக்கப்படுவர்.
இதன்படி எல்லாம் பாதுகாக்கப்படக்கூடிய முறைமையொன்றை தேடுகின்றோம். பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. புதிய முறைமைகளை தேடுவோம். அதற்காக ஒத்துழைப்புகளை வழங்குங்கள் என்றார்.