தோட்ட தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக்குவதற்கான வழிமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று இதொகாவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவருமா பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
கண்டி பூஜாபிடிய மாரதுகொட மைதானத்தில் இன்று (27) நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் கூறியவை வருமாறு,
“ தோட்ட தொழிலாளர்கள் சம்பளப் பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்தது. அதற்கான தீர்வைப் பெற்றுத்தர ஜனாதிபதி வழி செய்தார். அதேபோல் தோட்ட மக்கள் வாழும் பகுதிகளை கிராமங்களாக பிரகடனப்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இவ்வாறான தலைவரையே நாட்டின் அனைத்து இன மக்களும் எதிர்பார்த்தனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. எதிர்கட்சியினர் தோட்ட தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்கள் ஆக்கப்போவதாக கூறுகின்றனர். அதனை எவ்வாறு செய்வார்கள் என்று இன்றுவரை கூறவில்லை. ஆனால் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் அதற்குரிய பணிகள் அனைத்தையும் நாம் ஆரம்பித்திருக்கிறோம்.” – என்றார் பாரத் அருள்சாமி.