ஆலய சிலை பீடத்தில் பாதணியுடன் காலை தூக்கி வைக்க வேண்டாம் என்று சொன்ன, கமலநாதன் இமேஷ்நாதன் என்ற தமிழ் இளைஞரை, “நீ கும்பிடறது, சிலையின் தலையா? காலையாடா? உங்கட சாமி தலையிலயாடா காலை வைத்தோம்” என, கொச்சை தமிழில் திட்டி, அனுர, சந்துன் என்ற இரண்டு, தோட்ட வெளிக்கள அலுவலர்கள் தாக்கி உள்ளனர்.
இந்த தகவலை எமது அவிசாவளை புவக்பிட்டிய அமைப்பாளர் சசிகுமார் என் கவனத்துக்கு கொண்டு வந்த நிலையில் இதுபற்றி உறுதியான மேல் நடவடிக்கை எடுக்கும்படி அவிசாவளை பொலிசுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் மகிந்த குணரத்ன, நிலைய பொறுப்பதிகாரி ஜெயலத், இளநிலை அதிகாரி ராஜரத்ன ஆகியோரிடம் கடுமையாக வலியுறுத்தி உள்ளேன்.
இவர்களும் உறுதியான நடவடிக்கை எடுப்பதாக எனக்கு உறுதி அளித்துள்ளனர் என என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது;
தற்சமயம் காயமடைந்த கமலநாதன் இமேஷ்நாதன் அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார். அவரது உடலின் உயிர்நிலை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. கமலநாதனை தாக்கிய, சந்தேக நபர்கள் இருவரும், மிகவும் சூட்சுமமான முறையில் தாமும் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறி, அதே அவிசாவளை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக கூறி தங்கி உள்ளார்கள். இது பற்றியும் நான் பொலிஸ் அதிகாரிகளிடம் கூறி உள்ளேன் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.