“தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபாவையே வழங்காத நல்லாட்சியினர் பாதீட்டை விமர்சிப்பது வேடிக்கை”

” பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபா வழங்காத நல்லாட்சியினர் தற்போதைய வரவு செலவு திட்டத்தை விமர்சிப்பது வேடிக்கையானது.” – என்று நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அம்பகமுவ பிரதேச அரசியல் பிரிவு அமைப்பாளருமான கணபதி குழந்தைவேலு ரவி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட பிரதேசத்தில் வாழுகின்ற மக்களுக்கு பத்து போச் வீதம் காணி வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

நுவரெலியாவில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட பிரதேசங்களின் அபிவிருத்திக்கு 10 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவுகளை மக்களுக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டியது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சகல அரசியல்வாதிகளின் கடமையாகும். இதற்கு கல்வி அறிவும் ஆற்றலும் மிக்க நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன் நின்று செயல்பட உள்ளார். வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் நடைமுறைக்கு வரும்போது தாம் அரசியல் ரீதியாக பின்னடைவை சந்திக்கலாம் என்ற அச்சம் சிலருக்கு நிலவுகிறது.

அவர்கள் அந்த நிலைப்பாட்டில் இருந்து விடுபட்டு மலையக மக்களுக்கு ஒதுக்கப்பட்டது வந்து கிடைப்பதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமானோடு இணைந்து செயல்பட வேண்டும். பிரிவுகளும் பிளவுகளும் விதண்டாவாதங்களும் மலையக மக்களை மேலும் பின்னடைவுக்கு கொண்டு செல்லும்.நல்லாட்சி க்காலத்தில் வரவு செலவுத் திட்டத்தில் தனியார் துறை ஊழியர்களுக்கு முன்மொழிக்கப்பட்ட சம்பள உயர்வை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்காததையும், பின்னர் அது நாளொன்றுக்கு 50 ரூபாய் வீதம் அதிகரித்துக் கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்ததையும் இந்த 50 ரூபா சம்பள அதிகரிப்பை கூட நடைமுறைக்கு கொண்டுவர முடியாமல் இருந்ததை மலையக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் .” கணபதி குழந்தைவேலு ரவி தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles