ஹட்டன், செம்புவத்த தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தையொன்று ஹட்டன் உதவி தொழில் ஆணையாளர் காரியாலயத்தில் நாளை 14 முற்பகல் 10 மணியளவில் இடம்பெற உள்ளது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளர் சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஹட்டன் ஸ்டெதர்டன் தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 11 ஆம் திகதி வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் தொடர்பாக தோட்டத் தொழிலாளர்கள் தொழிலாளர் தேசிய சங்கம் ,மலையக தொழிலாளர் முன்னணி ஆகிய தொழிற்சங்கங்களின கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
இதனைத் தொடர்ந்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பாக மாநில இயக்குனர் மருத வீரன் ,உதவி பிரதிநிதி மகாலிங்கம் , மலையக தொழிலாளர் முன்னணியின் தொழிலுறவு அதிகாரி மாரிமுத்து ஆகியோர் தோட்டத்துக்கு விஜயம் செய்து தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்கள்.
இவ்விடயம் தொடர்பாக ஹட்டன் உதவி தொழில் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து தோட்ட நிர்வாகத்தினர் ,தொழிற்சங்க பிரதிநிதிகள் ,தொழிலாளர் தலைவர்கள் ஆகியோருக்கிடையிலான பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்டெதர்டன் தோட்டத் தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு :
தொழிலாளர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாத வகையில் தோட்டம் முறையாக பராமரிக்க வேண்டும்.
கொழுந்து பறிப்பதற்கு ஏனைய தோட்டங்களிலிருந்து தொழிலாளர்களை வரவழைக்க கூடாது.
கொழுந்து பறிப்பதற்கு இயந்திரங்கள் பயன்படுத்தக் கூடாது.
தற்காலிகத் தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழில் வழங்க வேண்டும்.
கொழுந்து மலைகளை வெளி ஆட்களுக்கு வழங்கக் கூடாது.
தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக தோட்ட நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் மாதம்தோறும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.
கூட்டு ஒப்பந்த சரத்துக்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
தோட்டத் தொழிலாளர் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு உரிய வகையில் செயல்படாவிட்டால் தோட்ட முகாமையாளர் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.