இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் தமது 41 ஆவது வயதில் நேற்றிரவு காலமானார்.
இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிட்னி சந்திரசேகர என்பவரால் 2008 ஆம் ஆண்டு இயக்கப்பட்ட சிங்கள சின்னத்திரை நாடகமான ‘ஏ 9’ மூலம் தர்ஷன் தர்மராஜ் அறிமுகமானார்.
அவர் தனது சினிமா பயணத்தை அதே ஆண்டில் ‘பிரபாகரன்’ என்ற சிங்கள மொழித் திரைப்படத்தில் ஆரம்பித்தார்.
இலங்கை தமிழர்கள் மத்தியில் பிரபலமடைந்த சிங்களத் திரைப்படங்களான இனியவன், சுனாமி போன்ற திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் உருவான ‘கோமாளி கிங்ஸ்’ என்ற பிரபல தமிழ் மொழி திரைப்படத்திலும் தர்ஷன் தர்மராஜ் நடித்துள்ளார்.
இதேவேளை, ஹிரு தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும், ‘ரெல்ல வெரலட ஆதரே’ என்ற நாடகத்தில் ‘ஜெயராஜ்’ என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.
அவரது பூதவுடல் இன்று மாலை 6 மணி முதல் பொரளை ஜயரத்ன மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.










