“ அடுத்தவாரம் தீர்க்கமான வாரமாகும். ஜனாதிபதிக்கு எதிராகவும், அவர் தலைமையிலான அரசுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முன்வைக்கப்படும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார்.
‘சுதந்திரத்துக்கான போராட்டம்’ எனும் தொனிப்பொருளின்கீழ் ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்படும் பாதயாத்திரை நேற்று 5 ஆவது நாளாகவும் தொடர்ந்தது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்னும் வரவில்லையே என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அடுத்தவாரம் தீர்க்கமான வாரமாகும். நாமும் தருணம் பார்த்து அரசியல் தாக்குதல் தொடுக்கவுள்ளோம். ஒன்றல்ல இரண்டு – மூன்று நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முன்வைக்கப்படும் என்பதை கூறிவைக்க விரும்புகின்றேன்.
அத்துடன், இரு பக்கங்களிலும் கால்களை வைத்துக்கொண்டு பயணிக்க முற்படும் அரசியல்வாதிகளின் முகத்திரையும் கிழிக்கப்படும்.
இடைக்கால அரசென்பது நாடகமாகும். மொட்டு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமை முகாமை செய்வதற்கான வியூகமாகும். அவ்வாறானதொரு பொறியில் அகப்படுவதற்கு நாம் தயாரில்லை. மக்கள் ஆணையுடனேயே ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அமையும்.” – என்றார்.