“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை கண்டறியும் நோக்கம் அரசாங்கத்துக்கு இருக்குமானால் பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்க வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கூறியவை வருமாறு,
” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவரும் பகிரங்கப்படுத்தப்படுவார்கள் என தேசிய மக்கள் சக்தி உறுதியளித்திருந்தது. எனினும், அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஹருண ஜயசேகர, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றபோது கிழக்கு மாகாண கட்டளைத்தளபதியாக இருந்துள்ளார். சாரா என்பவரும் அப்பகுதியில் இருந்தே மாயமாகியுள்ளார்.
எனவே, முறையான விசாரணை இடம்பெற வேண்டுமானால் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பதவி விலக வேண்டும். அப்போதுதான் அவருக்கு கீழ் இருந்தவர்கள் பற்றியும் விசாரணை நடத்த முடியும்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்படுமா என்பது முக்கியம் அல்ல. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம். பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க வேண்டும் என்ற உண்மையான நோக்கம் அரசாங்கத்துக்கு இருந்தால், பிரேரணையை ஏற்க வேண்டும்.” – என்றார்.