” இந்த நாட்டில் சமாதானத்துக்கான கதவுகள் இறுக மூடப்பட்டுள்ளன. நல்லிணக்கத்துக்கான கதவுகள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டு சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற திராணியும், தைரியமும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கு இல்லை.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சிறிதரன் எம்.பி. இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
” தமிழ் சினிமாவில் வரும் வடிவேலுவின் ‘வரும் ஆனால் வராது’ என்ற வசனம்போல்தான் ஜனாதிபதியின் பாதீட்டு உரை உள்ளது. 2024 ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் எனக் கூறப்பட்டாலும் அது சித்திரை மாதம்முதல்தான் அமுலுக்கு வரும். அதற்கிடையில் இந்த நாட்டில் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும். சிலவேளை பங்குனி மாதம் தேர்தல்கூட நடத்தப்படலாம். ஆட்சியாளர்களிடம் இவ்வாறு ஏமாற்று நடவடிக்கை இருக்கும்வரை, நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல சரியான பாதையை தெரிவுசெய்ய முடியாது.
இந்த நாடு சமாதானத்தினுடைய கதவுகளை இறுக்க மூடிவைத்துள்ளது. சமாதானம் பற்றி பேச எந்த தலைவருக்கும் திராணி இல்லை. ஜனாதிபதியாக இருக்கலாம், பிரதமராக இருக்கலாம், அமைச்சர்களாக இருக்கலாம் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வைக்கண்டு சமாதானத்தை ஏற்படுத்த முற்படுகின்றார்களா?
மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் பிரதமர்களுக்கு இருந்த தைரியம், அக்கறை இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு இந்தநாள்வரை வரவில்லை. நல்லிணக்கத்துக்கான கதவுகளும் சீல வைக்கப்பபட்டுள்ளன. நல்லிணக்கம் பற்றி பேசப்படுகின்றதேதவிர, நல்லிணக்கம் நல்ல இணக்கமாக மாறவில்லை. அதேபோல தமிழர்கள் வஞ்சிக்கப்படமாட்டார்கள், இனப்படுகொலை இடம்பெறாது என மீள் நிகழாமைக்கான எந்தவொரு உத்தரவாதமும் இல்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் காசால் விலைபேசுகின்றீர்கள். அவர்களுக்கு என்ன நடந்தது, போரில் சரணடைந்தவர்களின் கதி என்ன? இவை தொடர்பில் உண்மையை அறிவதற்கு முற்படாமல், விலை பேசுவது நியாயமா? உங்களின் (ஆட்சியாளர்கள்) மனசாட்சியிடம் கேளுங்கள்.” – என்றார்.