” ஒரு நாட்டின் நல்லிணக்கத்தை வலுப்படுத்த அந்த நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். இல்லையெனில் முதலில் தேசிய பாதுகாப்புக்குத் தான் அச்சுறுத்தல் ஏற்படும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே சஜித் இவ்வாறு கூறினார்.
” இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நல்லெண்ணத்துடன் தொடர்வது மிகவும் முக்கியமானது. மேலும் இது அரசியல் தந்திரமாக இருக்கக் கூடாது. அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி இந்தப் பதவிக்கு தெரிவாகியிருக்கிறார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் அவர் ஜனாதிபதியானார். எனவே அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு அரசாங்கத்தில் முரண்பட்ட கருத்துகள் இருக்க முடியாது. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தில் நாம் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். மேலும் இந்த வேலைத்திட்டம் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும்.” – என்றும் சஜித் குறிப்பிட்டார்.