“ நாங்கள் அரசியல் யாசகர்கள் அல்லர். நீங்கள் தனிவழி செல்வதாக இருந்தால்கூட எமக்கு பரவாயில்லை.” –
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கடும் சீற்றத்துடன் பஸில் ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கூட்டமொன்று ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வதிவிடத்தில் நடைபெற்றுள்ளது.
அமைச்சர்களான நிமல் சிறிபாலடி சில்வா, பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர, நாடாளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சாகல காரியவசம், பஸில் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது ஜனாதிபதி தேர்தல் மற்றும் அதனை எதிர்கொள்வது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
ராஜபக்சக்களை இணைத்துக்கொள்வதற்கு தாம் எதிர்ப்பு என நிமல் லான்சா அணி மற்றும் துமிந்த திஸாநாயக்க அணி என்பன தெரிவித்துள்ளன. 2015 ஜனாதிபதி தேர்தலின்போது வெளியில் இருந்து மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியதுபோல ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தமது அணிகளுக்கு பிரச்சினை இல்லை எனவும் மேற்படி தரப்புகள் அறிவித்துள்ளன.
இதனால் கடுப்பான பஸில் ராஜபக்ச,
“ ராஜபக்சக்கள் என்றால் யாரென நினைத்துக்கொண்டிருக்கின்றீர்கள்? ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப செயற்படுவதற்கு நாம் தயாரில்லை. நாம் அரசியல் யாசகர்கள் அல்லர். ஜனாதிபதி அழைப்பு விடுத்தால்தான் இச்சந்திப்புக்கு வந்தேன்.
நாமல் உட்பட எமது கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கான ஆதரவை விலக்கிக்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றபோதிலும் நான் சந்திப்புக்கு வந்தேன். எமது அரசியலை நாம் தனியே செய்கின்றோம். எவ்வித பிரச்சினையும் இல்லை.” – என்று குறிப்பிட்டுள்ளார் என அறியமுடிகின்றது.










