நாட்டின் நிலப்பகுதிக்குள் அகழ்வுகளை மேற்கொண்டு எரிவாயு மற்றும் மசகு எண்ணெயைப் பெற்றுக் கொள்வதற்காக விரிவான தகவல்கள் அடங்கிய வழிகாட்டல்களைத் தயாரிக்குமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகளுக்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) பரிந்துரைத்தது.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் அண்மையில் கூடியபோதே மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகளுக்கு இவ்வாறு பணிப்புரை வழங்கப்பட்டது.

இலங்கையில் திட்டமிடப்பட்டுள்ள இயற்கைத் திரவ எரிவாயுத் திட்டங்கள் (LNG) மற்றும் அவற்றின் தற்போதைய நிலைமைகள் குறித்து விளக்கமளித்த அமைச்சின் அதிகாரிகள், இந்த அகழ்வாராய்ச்சிகளுக்குப் பல்வேறு தடைகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.
இவற்றுடன் தொடர்புபட்ட தரப்பினர் குறித்து இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். அத்துடன், இந்த அகழ்வுகளுக்கு வெளிநாடுகளின் ஆலோசனைகள் தேவையா என்றும் அவர்கள் வினவியிருந்தனர். வேறு நாடுகளின் ஆலோசனைகள் தேவையில்லையென்றும் இங்கு வந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கமைய இந்த அகழ்வுகள் விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நாட்டின் தேவைக்குப் பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த அகழ்வுகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டல்கள் விரைவில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் கோபா குழு ஆலோசனை வழங்கியது.
