நானுஓயா டெஸ்போட்டில் அதிபரை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம்

நுவரெலியா கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் மமா/நு/ டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபரை, உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி இன்று (26) பெற்றோர் , அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து பாடசாலை நுழைவாயிலுக்கு முன்பாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிபரின் தவறான நடத்தை, நிர்வாக மோசடி உள்ளிட்ட விடயங்களாலேயே அவரை மாற்ற வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

470 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றும் இப்பாடசாலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் பெண் ஆசிரியைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என தெரிவித்தும், இப் பாடசாலைக்கு பொருத்தமான வேறொரு அதிபரை நியமிக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த அதிபர் தமது நிர்வாக கடமைகளை சரியாக செய்யாத காரணத்தினால் பாடசாலையின் கல்வி நிலை வீழ்ச்சியடைந்துள்ளது எனவும், அதிபர் மற்றும் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நிலவுவதாகவும் மேலும் தெரிவித்தனர். இதனால் கல்வி கற்கும் மாணவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

நுவரெலியா கல்வி வலய அதிகாரிகள் நீதியான முடிவை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Related Articles

Latest Articles