நாட்டில் வடக்கும், தெற்கும் பற்றி எரிவதற்கு இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையே காரணமாகும் – என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாட்டில் பொருளாதாரம் மேம்படவும், போரை முடிவுக்கு கொண்டுவரவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை பக்கபலமாக அமைந்தது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்நாட்டில் பொருளாதாரம் வங்குரோத்தடைவதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை காரணமாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வகித்தவர்தான் இந்நிலைமைக்கு காரணம் என நீதிமன்றம்கூட கூறியுள்ளது.
அத்துடன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையால்தான் 30 வருடகால போரும் மூண்டது.
1983 இல் நடைபெறவிருந்த தேர்தல் சர்வஜன வாக்கெடுப்புமூலம் ஒத்திவைக்கப்பட்டு, ஜனநாயகம் இல்லாது செய்யப்பட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை பயன்படுத்தியே இது செய்யப்பட்டது. வடக்கில் உள்ளவர்களுக்கு தமது பிரதிநிதிகளை அனுப்ப முடியாமல்போனது. தெற்கில் எமக்கும் முடியாமல் இருந்தது.
வடக்கும், தெற்கும் பற்றி எரிவதற்கு இந்த நிறைவேற்று அதிகார முறைமையே காரணம் என்பதை ஜனாதிபதி மறந்துவிட்டார்போலும்.” – என்றார்.