நுவரெலியாவில் 3 கடைகளுக்கு பூட்டு – 31 பேர் சுயதனிமையில்!

நுவரெலியா – கண்டி வீதியிலும் பிரதான வீதியிலும் மொத்தமாக மூன்று வியாபார நிலையங்கள் இன்று முதல் (26.10.2020) எதிர்வரும் 10.11.2020 வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாநகர சபை சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு கோட்டையில் இருந்து நேற்று முன்தினம் (24.10.2020) நுவரெலியாவிற்கு வியாபார நிலையங்களுக்கு பொருட்களை கொண்டுவந்த லொறி ஒன்றின் உதவியாளர் கடுமையான காய்ச்சலில் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று (26.10.2020) காலை அவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்தே சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று வியாபார நிலையங்களையும் தனிமைப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (24.10.2020) கொழும்பில் இருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு நுவரெலியாவிற்கு புறப்பட்ட குறித்த லொறியானது நேற்று முன்தினம் இரவே நுவரெலியாவை வந்தடைந்துள்ளது.இந்த லொறியில் கொண்டு வரப்பட்ட பொருட்களை நுவரெலியா கண்டி வீதியில் அமைந்துள்ள ஒரு வியாபார நிலையத்திற்கும் நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றிற்கும் கையளித்துள்ளனர்.

பின்பு குறித்த லொறி உதவியாளர் அன்று இரவு கண்டி வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் தன்னுடைய உணவை உட்கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இவர் நேற்று கடுமையான காய்ச்சலுக்கு உல்லான நிலையில் இவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவரை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவருடைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவு கிடைக்கப்பெற்ற பின்பு மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது. மொத்தமாக மூன்று வியாபார நிலையங்களிலும் 31 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

Related Articles

Latest Articles