நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் ‘மரண பீதி பயணம்’!

நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் போதிய பேருந்து வசதி இல்லாததால் பாடசாலை மாணவர்கள் உயிரைப் பணயம் வைத்து பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் நிலையும் , குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரம் அரசப் பேருந்துகள் இயக்கும் நிலையும் தொடர்க்கதையாக உள்ளது .

அத்துடன் ரதல்ல , கிரிமிட்டி டெஸ்போட் , கெல்சி , மாஹாஎலிய , கிளாரண்டன் போன்ற பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் நானுஓயா மற்றும் நுவரெலியா பிரதான நகரில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று வருகின்றனர். இருந்தும் உரிய பேருந்து வசதியின்றி அரச , தனியார் பேருந்துகளில் படிகளில் தொங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் தினமும் பயணித்து வருகின்றனர்.

தங்களுடைய பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும்போது இப்படி பயணிப்பதை கண்ட மாணவர்களின் பெற்றோர், பிள்ளைகள் தினமும் வீடு திரும்புவதற்குள் பதற்றத்துடனேயே காணப்படுகின்றனர். இவ்வாறு பயணிக்கும் மாணவர்கள் ஒரு சிலர் பேருந்து படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து காயங்கள் ஏற்படுவதும் குறிப்பிடத்தக்கது.

நுவரெலியாவில் இருந்து தலவாக்கலை செல்லும் A7 பிரதான வீதியினை அகலப்படுத்தி அபிவிருத்தி செய்யப்பட்டது தற்போது வாகனங்கள் இலகுவாகவும், விரைவாகவும் செல்லக்கூடியதாக புனரமைக்கப்பட்ட போதிலும் டெஸ்போட் , கிரிமிட்டி வழியாக உரிய போக்குவரத்து சேவையின்றி பாடசாலை செல்லும் மாணவர்களும் , பொது மக்களும் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யமுடியாமல் துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் அத்துடன் ஹட்டன் மற்றும் டயகாமத்தில் இருந்து நுவரெலியா நோக்கி பயணிக்கும் சில அரச பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்வதாகவும் இது தொடர்பாக பல்வேறு தரப்பினருக்கும் குறிப்பாக போக்குவரத்து துறை சார்ந்த உயர் அதிகாரிகள் நுவரெலியா மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலருக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை தொடர்ந்து பாடசாலை மாணவர்களும் , பொதுமக்களும் பாதிக்கப்படும் நிலையே காணப்படுகிறது .

குறிப்பாக டெஸ்போட் பிரதேசத்தை அண்டிய பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களே இவ்வாறு தொடர்ந்து அசௌகரியங்களுக்குள்ளாகி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இலங்கை போக்குவரத்து சபையினால் வழங்கும் மாதாந்த பருவகால சிட்டை பாடசாலை மாணவர்கள் பெற்றுக்கொண்டு சேவையில் இருக்கும் அரச பேருந்துக்கள் மாணவர்களை ஏற்றாது செல்வதால் பாடசாலை செல்லவும் மீண்டும் பாடசாலையில் இருந்து வீடு வரவும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மாணவர்கள் பருவகால சிட்டையை பெற்றும் எந்தவித முன்னேற்றமும் இல்லை மாறாக மாதாந்த பருவகால சிட்டை பெற்றபின்னர் தான் ஏற்றாமல் செல்வது அதிகரித்திருப்பதாகவும் தொடர்ந்து இவ்வாறான செயல்கள் காரணமாக பருவகால சிட்டை மாத்திரம் நம்பி வீதிக்கு வரும் பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் மீண்டும் வீடுகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் , மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தவரையில் காலை வேளையில் நிலவும் கடும் குளிர் காலநிலையிலும் பாடசாலை மாணவர்களின் புத்தகப்பையின் பாரத்தை சுமந்து நீண்ட தூரம் நடந்து செல்வதென்பது இயலாத காரியமாகும். குறித்த பிரதேசங்களில் இருந்து பாடசாலைக்கும் இடையில் சுமார் பத்து கிலோமீட்டருக்கு மேற்பட்ட இடைவெளி காணப்படுகிறது. பெருந்தோட்டங்களிலிருந்து வறிய குடும்பத்திலுள்ள பிள்ளைகள் தினமும் போக்குவரத்து செலவுகளுக்காக சிறு தொகை பணத்தை அல்லது இலங்கை போக்குவரத்து சபையினால் வழங்கும் பருவகால சிட்டை மாத்திரம் எடுத்துச் செல்வது வழக்கமாகும் இவ்வாறான நிலையில் பேருந்துக்காக காத்திருக்கும் மாணவர்களை ஏற்றாமல் செல்லும் செய்பாடு தொடர்ந்து கொண்டே இருக்கிறது இந்நிலையில் பேருந்துக்கள் நிறுத்தாமல் செல்வதனால் தினமும் அவர்களால் முச்சக்கர வண்டியிலோ அல்லது ஏனைய வாகனங்களில் பயணிக்க வழியில்லாமல் பொதுப்போக்குவரத்தையே நம்பியுள்ளனர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்த அரச பேருந்துக்களும் தற்போது டெஸ்போட் வழியாக சுற்று வீதியில் சென்றாலும் காலை நேரத்தில் மாணவர்களும் , பொதுமக்களும் உரிய நேரத்தில் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். ஆனால் இந்த வீதியிலே அதிகளவான ஹட்டன் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துக்கள் சேவைகள் இடம்பெறுகின்ற போதும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லலாமையானது பொதுமக்கள் மத்தியில் பாரிய விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வீதியில் காலை நேரங்களில் குறிப்பிட்ட நேரங்களில் அரச மற்றும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாமையால் இப்பிரதேச மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

இருந்தும் மாணவர்களின் பெற்றோர்கள் இணைந்து வீதியில் நின்று பேருந்தை மறித்து மாணவர்களை ஏற்றினாலும் பேருந்தின் நடத்துனர்கள் சாரதிகள் மாணவர்களை ஒரு சில தகாத வார்த்தைகளில் ஏசுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மாணவர்கள் மாத்திரமன்றி குறித்த பிரதேசங்களில் இருந்து நானுஓயா மற்றும் நுவரெலியா பிரதான நகரத்திற்கு செல்கின்ற பொதுமக்கள் வயோதிபர்கள் நோயாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் பேருந்துகள் ஏற்றிச் செல்லாத காரணத்தினால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் .

எனவே நானுஓயா டெஸ்போட் வழியாக சுமார் ஏழு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 28 ஆயிரம் பொதுமக்களின் நலனை கருத்திற் கொண்டும் , மாணவர்களின் கல்வியின் நலனுக்காகவும், மாணவர்களின் நலனுக்காகவும் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த வீதியில் இடம் பெறுகின்ற பேருந்து சேவையினை அதிகரித்து , அனைத்திலும் மாணவர்களும் , பொதுமக்களும் இலகுவாக சென்று வரக்கூடிய வகையில் உரிய நேரத்திற்கு சீரான பேருந்து சேவையை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வரவேண்டும் இல்லையேல் நுவரெலியா – தலவாக்கலை ஏ7 பிரதான வீதியை மூடி மாபெரும் போராட்டம் மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

நானுஓயா நிருபர்

Related Articles

Latest Articles