நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் உட்பட 14 பேர் இன்று (14.10.2020) விளக்கமறியலில் வைக்கப்பட்டு சரீர பிணையில் செல்வதற்கு நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதிபதி, பபோத ஜயசேகர உத்தரவிட்டுள்ளார் என சட்டத்தரணி தேவராஜ் ஆதவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சட்டத்தரணி தேவராஜ் ஆதவன்,
“நானுஒயா ரதல்லை குறுக்கு வீதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றிற்கு அத்துமீறி நுழைந்ததாக அந்த கட்டிடத்தின் உரிமையாளர் என கூறிக் கொள்ளும் பாருக் அப்துல் லதீப் என்பவர் நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ், பிரதேச சபை உப தலைவர் மற்றும் பிரதேச சபை அதிகாரிகள் உட்பட 18 பேருக்கு எதிராக நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கு இன்று (14.10.2020) விசாரணைக்கு வந்த பொழுதே நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பபோத ஜயசேகர இன்று வழக்கில் ஆஜராகியிருந்த 14 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன்.பிரதேச சபை தலைவர் வேலுயோகராஜ் மற்றும் ஏனைய 18 பேருக்காக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணியும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.இராஜதுரை நீதவானிடம் தமது கட்சிக்காரர்களுக்கு பிணை வழங்க அனுமதி கோரிய பொழுது கடுமையான நிபந்தனைகளுடன் தலா ஒவ்வொருவருக்கும் ஒரு இலட்ச ரூபா சரீர பிணையில் செலவதற்கு அனுமதி வழங்கினார்.
இந்த வழங்கில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாத ஏனைய நால்வருக்கும் நீதிமன்ற அழைப்பானை வழங்கப்பட்டதுடன் அவர்களை அடுத்த நீதிமன்ற திகதியில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதிபதி பபோத ஜயசேகர உத்தரவிட்டுள்ளதுடன் இந்த வழக்கை எதிர்வரும் 16.12.2020 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளதாக சட்டத்தரணி தேவராஜ் ஆதவன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு