நுவரெலியா மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் மேலதிக 12 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நுவரெலியா மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தனலால் கருணாரத்ன இன்று செவ்வாய்க்கிழமை (15.12.2020) நடைபெற்ற மாநகர சபை விசேட வரவு செலவு கூட்டத்தில் சமர்ப்பித்தார்.
இதன்போது வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக ஜக்கிய தேசிய கட்சியின் 12 உறுப்பினர்களும் முதல்வர் உட்பட 13 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
வரவு செலவு திட்டத்திற்கு எதிராக பொதுஜன ஜக்கிய முன்னணி உறுப்பினர் மகிந்த தொட்மபே கமகே வாக்களித்தார்.பொதுஜன ஜக்கிய முன்னணியின் ஏனைய – சபைக்கு வருகை தந்திருந்த எம்.பி.நவரட்ணம் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இவருடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பான இரண்டு உறுப்பினர்களான சட்டத்தரணி சிவன்ஜோதி யோகராஜ், ஜெயராம் வினோஜி ஆகியோர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தனர்.
இந்த வரவு செலவு திட்டத்திற்கு பொதுஜன முன்னணி சார்பில் 4 உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 2 உறுப்பினர்களும் சபைக்கு வருகை தரவில்லை.பொதுஜன முன்னணி சார்பாக திருமதி.சிவரஞ்சனி, திருமதி.அனுசா சாமலி இந்திக முனவீர திருமதி.தமரா திசாநாயக்க ஆகியோரே வரவு செலவு கூட்டத்திற்கு வருகை தராதவர்கள் ஆவர்.
இவர்களுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவம் செய்கின்ற வணக்கற்குறிய மாகந்துரே ரத்ன வன்ச தேரர் மற்றும் நலீன் கீர்த்தி சமரஜீவ ஆகியோரும் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.இவர்கள் விடுமுறை கோரி சபைக்கு கடிதங்கள் அனுப்பியிருந்ததுடன் அந்த கடிதங்கள் சபையில் மாநகர முதல்வர் சபைக்கு சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் இங்கு கருத்து தெரிவித்த மாநகர சபை முதல்வர் சந்தணலால் கருணாரத்ன இந்த வரவு செலவு திட்டமானது மக்கள் நலன் சார்ந்த திட்டம் எனவும் 2021 ஆம் ஆண்டு மிகவும் சவால் மிகுந்த ஆண்டாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு










