நைஜர் இராணுவ ஆட்சிக்கு ஐ.நா. கண்டனம்

ஆபிரிக்க நாடான நைஜரில் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில் அதற்கு ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உலக நாடுகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஜனாதிபதி முகமது பாசும் தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. எனினும், அந்நாட்டின் இராணுவம் திடீரென அரசுக்கு எதிராக திரும்பியது. இதனால் ஜனாதிபதி முகமது பாசுமை இராணுவம் சிறை வைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் நைஜர் இராணுவ  குழு அங்குள்ள அரசு தொலைக்காட்சியில் தோன்றி பேசினர். அப்போது, கைது செய்யப்பட்ட ஜனாதிபதி முகமது பாசும் தனது பதவியில் இருந்து அகற்றப்பட்டுள்ளார். எனவே அங்கு இராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டு உள்ளது என வெளிப்படையாக அறிவித்தனர்.

எனவே மற்ற நாடுகள் இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என அவர்கள் கூறினர். இதற்கிடையே அங்குள்ள தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் முற்றிலும் முடக்கப்பட்டன. நாட்டில் இயல்பு நிலை திரும்பும்வரை அங்கு வான் மற்றும் தரை எல்லைகள் மூடப்படும் எனவும், இரவு நேர ஊரடங்கு அமுலில் இருக்கும் எனவும் இராணுவத்தினர் அறிவித்தனர்.

ஐ.நா. கண்டனம்

அதேவேளை, ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கூறுகையில், `ஜனநாயகத்துக்கு இடையூறு விளைவிக்கும் அனைத்து செயல்களையும் ராணுவத்தினர் நிறுத்த வேண்டும். மேலும் அதிபர் முகமது பாசுமை எந்த ஒரு நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என கண்டனம் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்த நைஜர் நாடானது கடந்த 1960-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது.

Related Articles

Latest Articles