பங்காளிகளை சீண்டியது மொட்டு கட்சி! மீண்டும் அரசியல் சமர் ஆரம்பம்!!

“ அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜனாதிபதியால் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு இணக்கத்தை தெரிவித்துவிட்டு, வெளியில் வந்து கூட்டறிக்கைகளை விடுக்கும் பங்காளிக்கட்சிகளின் செயற்பாடு தவறான அணுகுமுறையாகும்.” – என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் பிரதான பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மொட்டு கட்சியின் ஊடகவியலாளர்   அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், அமைச்சருமான காமினி லொக்குகே, ஆளுங்கூட்டணில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளை விமர்சித்து கருத்து வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை, தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகளும், தொழிற்சங்கங்களும் அறிவிப்புகளை விடுத்துவருகின்றன. மக்களின் தொழிலையும் பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கி பயணிப்பதற்கே அரசு திட்டமிடுகின்றது. எனினும் அரசின் வேலைத்திட்டத்தை குழப்பியடிப்பதற்கு எதிர்க்கட்சிகளும், தொழிற்சங்கங்களும் முற்படுகின்றன. இதற்கு இடமளிக்கமுடியாது.

எனினும், எமது அணியிலுள்ள சிலரும்(பங்காளிக்கட்சிகள்) இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் செயற்படுவது கவலையளிக்கின்றது. தோழமைக்கட்சிகளின் தலைவர்கள் அமைச்சரவையிலும் இருக்கின்றனர். அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜனாதிபதியுடன் இணங்கிச்செல்கின்றனர். ஆனால் வெளியில்வந்து, நாட்டை மூடுமாறு கையொப்பமிட்டு கூட்டறிக்கை விடுகின்றனர்.

அமைச்சரவைக்கூட்டத்தின்போது ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை விடுத்திருக்கலாம். ஆனால் அங்கு கதைப்பதில்லை. வெளியில் வந்து அறிக்கைகள் விடுகின்றனர். இதனால் குழப்பநிலை உருவாகின்றது. பங்காளிக்கட்சிகளின் செயற்பாடையொட்டி கவலையடைகின்றோம். அவர்கள் சர்வதேசத்தின் பிடிக்குள் சிக்கிவிட்டனரா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

அதிகாரம் குறித்து அல்ல தற்போதைய சூழ்நிலையில் மக்களைப் பற்றியே சிந்திக்க வேண்டும். கொவிட் பிரச்சினை தீர்ந்த பின்னர் அரசியல் நடத்தலாம்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியதும், தலிபான்கள் ஆட்சியைப்பிடித்ததுபோல, இங்கும் அவ்வாறு செய்ய முடியும் என சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். சர்வதேசம் இலங்கைமீது கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைய வைரல் பரவலைக்கட்டுப்படுத்துவதே எமது நோக்கம். தடுப்பூசி திட்டமும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு ஒத்துழைப்பு வழங்காமல் மக்களை குழப்பும் வகையிலும் பொருளாதாரத்தை சீர்குலைய வைக்கும் நோக்கிலும் எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் செயற்படுவது வேதனையளிக்கின்றது.” – என்றார்.

நாட்டை இரு வாரங்களுக்கு முடக்குமாறும் 7 பரிந்துரைகளை முன்வைத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் 10 பங்காளிக்கட்சிகள் கடிதம் அனுப்பின.

குறித்த பங்காளிக்கட்சிகளுள் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசு தேவ நாணயக்கார, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திரக்கட்சி குறித்த அறிக்கையில் கையொப்பமிடவில்லை.

அதேபோல ஏனைய 7 கட்சிகளின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles