“ மாற்று வேறுபாடுகள், மாற்று யோசனைகள் என்பன கூட்டணி அரசின் பண்புகளாகும். அவ்வாறானதொரு நிலைமைதான் தற்போது அரச கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ளது. எனினும், உள்ளக பிரச்சினைகள் தொடர்பில் கதைக்கும் அளவுக்கு அரசு நோய்வாய்படவில்லை. நிரோகியாகவே இருக்கின்றது.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது, “ நாட்டை முடக்குவதில்லை என அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு இணக்கம் தெரிவித்த சில அமைச்சர்கள் வெளியில்வந்து, நாட்டை மூடுமாறு அறிக்கை விடுக்கின்றனர்.
இதனை மொட்டு கட்சியின் செயலாளர் கடுமையாக விமர்சித்துள்ளார். எனவே, அரச கூட்டணிக்குள் மோதல் உருவாகியுள்ளதா என்ற தொனியில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ உலகளவில் கூட்டணி அரசியல் என்றாலேயே பல தரப்பட்ட கருத்துகளும், மாற்று யோசனைகளும் இருக்கும். அதுதான் கூட்டணி கலாசாரமும்கூட. எமது நாட்டிலும் இது முதன்முறை அல்ல. இதற்கு முன்னரும் அவ்வாறு நடைபெற்றுள்ளது. அந்தவகையில் உள்ளக பிரச்சினை தொடர்பில் கதைக்கும் அளவுக்கு அரசு நோய்வாய்ப்படவில்லை. நிரோகியாகவே இருக்கின்றது.
இவ்விடயம் தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் நான் ஆராய்ந்து பார்த்தேன். அமைச்சரவைக் கூட்டம் இரவு 10.10 மணிவரை அன்றைய தினம் நடைபெற்றுள்ளது. ஆனால் அதற்கு முன்னர் அரசுக்கு ஆதரவு வழங்கும் பங்காளிக்கட்சிகளின் கூட்டமொன்று: 8 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் என்பதால் அச்சந்திப்பு 9 மணிவரை பிற்போடப்பட்டுள்ளது. இதனால் அமைச்சர்களான விமல், வாசு, கம்மன்பில போன்றவர்கள் 9 மணியளவில் அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து சென்றுள்ளனர்.
பொது முடக்கம் தொடர்பில் இறுதி தருவாயிலேயே பேசப்பட்டுள்ளது. நேரம் கடந்துவிட்டதால் அது பற்றி மேற்படி அமைச்சர்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. அதற்கு முன்னர் நாட்டை முடக்க வேண்டும் என்ற தீர்மானம் பங்காளிக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது என தெரியவந்தது.
கூட்டணியாக செயற்பட்டாலும் தேர்தல்களின்போது சில கட்சிகளின் தனித்து போட்டியிடுவதும் நடக்கும்.
போரின் தீர்க்கமான கட்டத்தில் இந்திய அரசு உதவியது. ஆனால் மத்திய அரசுடன் கூட்டு வைத்திருந்த தி.மு.க. அதனை எதிர்த்து, எமக்கு எதிராக செயற்பட்டது. கூட்டணி என்றாலே அப்படிதான். ஆனால் கூட்டணி ஐக்கியத்துக்கு அது பாதிப்பாக அமையாது. நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போதும், எதிரணிகள் கனவு கண்டன. இறுதியில் என்ன நடந்தது? அரசின் ஒற்றுமை வெளிப்படுத்தப்பட்டது.” – என்றார்.










