பதுளை, பசறை நகர்களில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதன்போது இரு நகரங்களிலும் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி வர்த்தகர்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.
பதுளை நகரில் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள், தாதியர் தொழிற்சங்கம், வங்கி ஊழியர் சங்கம், பெருந்தோட்டத் தொழிலாளர்கள், பல்கலைகழக மாணவர்கள்,பொதுமக்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் ஊவா மாகாண சபைக்கு முன்பாகவும், பேரூந்து தரிப்பு நிலையத்திற்கு அருகிலும் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பசறை நகரிலும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள், ஒன்றிணைந்த தொழிறாசங்கங்களின் அங்கத்தவர்கள் இணைந்து அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுபட்டிருந்ததுடன் தனியார் பேரூந்துகள் இயங்கவில்லை.
பெருந்தோட்டங்களிலும் மலையக தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்ததுடன் தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லாமல் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
பாடசாலை மாணவர்களுக்கான தனியார் பேரூந்து சேவையும் இடம்பெறவில்லை.
ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் கோரிக்கையை அனைத்து தரப்பினரும் ஏற்றதன் காரணமாக பதுளை மாவட்டத்தின் பிரதான நகரங்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருந்தை அவதானிக்க முடிந்தது.
பசறை நிருபர்