இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் மெல்போர்னில் நாளை (26) ஆரம்பமாகின்றது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நாளை ,இலங்கை நேரப்படி அதிகாலை 5 மணிக்கு ஆரம்பமாகின்றது.
கிறிஸ்மஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த போட்டி ‘பாக்சிங் டே’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ‘பாக்சிங் டே’ என்றால் ஒருவருக்கொருவர் கோதாவில் குதிக்கும் நாள் என்று அர்த்தம் கிடையாது. இதற்கென நீண்ட பாரம்பரியம் உண்டு. அந்த பெயர் எப்படி வந்தது என்பதை இங்கு பார்க்கலாம்.
* இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற மேலைநாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தேவாலயங்கள் முன்பு பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும். ஆலயத்திற்கு வருபவர்கள் அதில் நன்கொடை செலுத்துவார்கள். மறுநாள் அதாவது டிசம்பர் 26 ஆம் திகதி அன்று பெட்டியை பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளியோருக்கு தானமாக வழங்குவார்கள். பாக்சை திறக்கும் அந்த நாளை ‘பாக்சிங் டே’ என்கிறார்கள்.