பதுளை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் வேளையில் பசறை பகுதியில் பெய்த கடும் மழையினால் பசறை வலயக் கல்விக் காரியாலயத்திற்குள் வெள்ளநீர் புகுந்ததால் காரியாலத்தில் கடமையாற்றிய ஊழியர்கள் அசெளகரியங்களுக்கு உள்ளாகினர்.

வலயக் கல்விக் காரியாலயத்திற்கு அருகில் உள்ள வீடுகளில் உள்ள நீர் வடிகால் அமைப்புகள் முறையாகப் பராமரிக்கப்படாமையின் காரணமாக இவ்வனர்த்தம் ஏற்பட்டது. இதேவேளை கடந்த வாரத்தில் இருந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக பதுளை-பசறை வீதி, பசறை- நமுனுகுல வீதி, மடுல்சீமை வீதி உட்பட பல வீதிகளில் ஆங்காங்கே மண்மேடுகள் சரிந்துள்ளன. நமுனுகுல வீதியில் கற்பாறைகள் வீதிகளுக்கு உருண்டு வரும் அபாயம் நிலவுகின்றது.

தொடரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கிராம மற்றும் தோட்டப்புற குடியிருப்புகளுக்கு அருகாமையில் சில பகுதிகளில் மண்மேடுகள் சரிந்துள்ளன.கடும் மழையுடன் இடி,மின்னல் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர்
ஈ.எம். எல்.உதயகுமார தெரிவித்துள்ளார்.மேலும் மழைநீர் வழிந்தோடக் கூடிய வகையில் தமது வீடுகளில் வடிகால் அமைப்பை சீர்செய்வதோடு, நீரை தேங்கும் பொது இடங்களிலும் வடிகாலமைப்பை சீர் செய்யுமாறு கூறியுள்ளார்.

அதி அனர்த்த பிரதேசங்களில் வாழும் மக்கள் அனர்த்த முகாமைத்துவ நிலையம் வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தொடர்ச்சியாக கடும் மழைவீழ்ச்சி பதிவாகுமாயின் பதுளை மாவட்டத்தின் பலப்பகுதிகளில் பாரிய மண்சரிவு அபாயம் ஏற்படும் அபாயம் நிலவுதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
