பதுளை,வெலிகேமுல்ல பகுதியில் வீதியோரத்தில் கைக்குண்டு ஒன்று நேற்று (17) மாலை கண்டுபிடிக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகேமுல்ல ஸ்ரீ அனந்தராம விகாரைக்கு அருகாமையில் வீதியின் இருபுறங்களையும் துப்பரவு செய்துகொண்டிருந்த நபர் ஒருவர் இந்த கைக்குண்டைக் கண்டு 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு அறிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்தது. கைக்குண்டை செயலிழக்கச் செய்ய புத்தல பொலிஸ் விசேட அதிரடிப்படை உதவி பெறப்பட்டது.
இந்நாட்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கைக்கு பயந்து இந்த கைக்குண்டை யாரோ அந்த இடத்துக்கு கொண்டுவந்து போட்டியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் பணிப்புரையின் பேரில், பதுளை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.எம்.ரத்நாயக்க இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜ்
