பதுளையில் 12,822 பேருக்கு கொரோனா! 176 பேர் இதுவரை உயிரிழப்பு!!

பதுளை மாவட்டத்தில் 15 பிரதேச செயலகங்களில் கோவிட் 19 தொற்றினால் சிகிச்சை பயனின்றி 16-08-2021 வரையில் மொத்தமாக 176 பேர் உயிரிழந்துள்ளனர்.

பன்னீராயிரத்து எண்ணூற்று இருபத்தி இரண்டு பேர் இதுவரையில் கோவிட் 19 தொற்றுக்கிலக்காகியிருக்கின்றனர்.

நாலாயிரத்து நாற்பத்தி நான்கு பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென்று, பதுளை மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் செயலக அனுமதியுடன், பதுளை மாவட்ட செயலாளர் புள்ளி விபரப்பட்டியலை வெளியிட்டுள்ளார்.

பதுளை, பண்டாரவளை, எல்ல, ஹல்துமுள்ளை, ஹப்புத்தளை, கந்தகெட்டிய, லுணுகலை, மகியங்கனை, மீகாகியுல, பசறை, ரிதிமாலியத்த, சொரணாதொட்ட, ஊவா – பரணகம, வெலிமடை, ஹாலி-எலை ஆகிய 15 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்தே, மேற்படி விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

லுணுகலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் ஐந்து சிறுவர்கள் உள்ளிட்டு 21 பேர், (இன்றைய தினம்) 16-08-2021ல் கோவிட் 19 தொற்றுக்கிழக்காகியுள்ளதாக லுணுகலை பிரதேச சுகாதார சேவை பணியகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லுணுகலைப் பகுதியில் பீஸ்ஸகம – ஒருவர், மடுகஸ்தலாவ – 5பேர், ஹொப்டன் – 11 பேர், ஜனதாபுர – இருவர், கொட்டல்பெத்த – ஒருவர், அரவாக்கும்பர – ஒருவர் என்ற வகையில் 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பெண்களும், 10 ஆண்களுமாவர். இவர்களில் மூன்று வயது நிரம்பிய பெண் குழந்தைகள் இருவர், 5 மற்றும் 11 வயதுகளையுடைய (ஆண் சிறார்கள்) மூவரும் அடங்கியுள்ளனர்.

பதுளை அரசினர் மருத்துவமனையில் அம்புலன்ஸ் வாகன சாரதிகள் மூவர், பிரதி வைத்திய பணிப்பாளர் ஒருவர் உள்ளிட்டு நான்கு டாக்டர்கள் ஆகிய ஏழு பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகியிருப்பதாக, பதுளை மருத்துவமனை விசேட வைத்திய நிபுணர் பாலித்த ராஜபக்ச கூறினார்.

இவர்கள் அனைவரும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தினர் தத்தம் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நூற்றுக்கு 60 வீதமானவர்கள், பதுளை அரசினர் மருத்துவமனையில் கோவிட் 19 தொற்றாளர்களாக இருந்து வருகின்றதாகவும் விசேட வைத்திய நிபுனர் பாலித்த ராஜபக்ச தெரிவித்தார்.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles