உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக பதுளை மாவட்டத்தில் 144 வேட்புமனுக்கள் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இவற்றில் 9 வேட்பு மனுக்களில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகள் காரணமாக அவை நிராகரிக்கப்பட்டதாக பதுளை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்;ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் 14 உம், சுயேட்சை குழுக்கள் 11உம் குறித்த தேர்தலுக்காக பதுளை மாவட்டத்தில் உள்ள 18 உள்ளூராட்சி மனறங்களுக்காக வேட்புமனு பத்திரங்களை தாக்கல் செய்திருந்தன.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு பத்திரங்களில் சர்வஜன பலய கட்சி ஹாலிஎல, பசறை, ரிதிமாலியத்த ஆகிய பிரதேச சபைகளுக்காக தாக்கல் செய்த வேட்புமனு பத்திரங்களும், ஜனசெத பெரமுன பண்டாரவளை மாநகர சபைக்காக தாக்கல் செய்த வேட்புமனு பத்திரமும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊவாபரணகம, வெளிமடை ஆகிய பிரதேச சபைகளுக்காக தாக்கல் செய்த வேட்புமனு பத்திரங்களும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மலையக மக்கள் முன்னணி பதுளை பிரதேச சபைக்காக தாக்கல் செய்த வேட்புமனு பத்திரங்களும் இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஏனைய 135 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பசறை நிருபர்