பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அனர்த்தம்

பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (18) பிற்பகல் வேளையில் பெய்த கடும் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பிரதான வீதிகள் பலவற்றில் மண் சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டு பொது போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல். உதயகுமார தெரிவிக்கின்றார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்: நேற்று பிற்பகல் வேளையில் பதுளை, பண்டாரவளை, அப்புத்தளை, ஹல்துமுல்ல, வெளிமடை, ஹாலிஎல மற்றும் பசறை பகுதிகளில் கடுமையான மழைவீழ்ச்சிப் பதிவாகியது. இதன் காரணமாக பதுளை- வெளிமடை பிரதான வீதியின் புகுல்பொல பகுதியில் மண்மேடுகளுடன் கற்பாறைகளும் சரிந்து பிரதான வீதியில் வீழ்ந்துள்ளதால் வீதியின் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பாதையை இன்று (19) சீர்செய்வதாக வீதி அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர். ஹாலிஎல- கந்தேகெதர வீதியில் கீரியகொல்ல பகுதியில் வீதியில் மண்மேடு சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனினும் அப்பாதை தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது. ஹாலிஎல நகரின் சில பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக மின் கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள் என்பன சரிந்து மின்சாரத் துண்டிப்பும் ஏற்பட்டது. எனினும் அவை துரிதமாக சீர்செய்யப்பட்டுள்ளன.இதேவேளை அப்புத்தளை- காஹகொல்ல வீதியிலும் மண்மேடு சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஹாலிஎல பகுதியில் சில வீடுகளும் கடும் மழையினால் சேதமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பதுளை மாவட்டத்தில் தொடர்ந்தும் கடும் மழை பெய்யும் வானிலையே காணப்படுகிறது.

மண் சரிவு அபாயம் நிலவும் வீதிகளில் இரவு நேர போக்குவரத்தை பொதுமக்கள் தவிர்ப்பதுடன், தமது குடியிருப்புகளுக்கு அருகில் மழை நீரை தேங்க விடாது வழிந்தோட செய்யும் வகையில் வடிகால்களை செப்பனிட்டு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திடீர் அனர்த்த சந்தர்ப்பங்களில் பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர் ஊடாக தமது நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பசறை  நிருபர்

Related Articles

Latest Articles