உரம் வழங்குமாறும், எரிபொருட்களின் விலையைக் குறைக்குமாறும், தடுப்பூசி பெற்றுக்கொடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தி கலஹா, தெல்தோட்டை பிரதேச செயலகத்துக்குட்பட்ட நவநெலியகம பகுதியில் வயலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக்கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் சாந்தினி சாந்தினி கோங்கஹகே, பிரதேச அரசியல் வாதிகள், விவசாயிகள் உட்பட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தெல்தோட்டை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் நெல் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளே அதிகம். உரத்தட்டுப்பாட்டால் விளைச்சல் அழிவடைந்து வருகின்றது என சுட்டிக்காட்டும் விவசாயிகள், தமக்கு உரம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எரிபொருட்களின் விலையும், இதர பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாழ்க்கைச்சுமை உச்சம் தொட்டுள்ளது. எனவே, விலை குறைப்பு செய்து நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
பெருந்தோட்டப்பகுதியில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என்ற பதாதையும் போராட்டத்தின்போது ஏந்தப்பட்டிருந்தது.










