பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பான வெளியான புதிய தகவல்

சுகாதார வழிகாட்டுதலின் கீழ் பாடசாலைகளை விரைவாக திறப்பது குறித்து அரசாங்கம் ஆலோசனைகளை நடத்திவருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

பாடசாலைகளை திறப்பது குறித்த கொள்கை ரீதியான முடிவை எடுப்பது கல்வி அமைச்சுக்கு உரித்தான விடயமாகும். அதற்கான சுகாதார வழிகாட்டல்களை பெற்றுக்கொடுப்பது சுகாதார அமைச்சின் பொறுப்பாகும்.

இருத்துறை சார்ந்த அதிகாரிகளும் இதன்போது கலந்துரையாடல் நடத்தி இணக்கப்பாடுகளை எட்டியுள்ளனர். சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சின் மூத்த அதிகாரிகள் உட்பட துறைசார் அதிகாரிகள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.

200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 5000 பாடசாலைகள் உள்ளன. விரைவில் இதுபோன்ற பாடசாலைகளை தொடங்க எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, தரம் 6 வரை முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகளை தொடங்குவதில் கவனம் செலுத்தப்பட்டதுடன், பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதியை கல்வி அமைச்சு முடிவு செய்யும். அடுத்த இரண்டு மூன்று வாரங்களுக்குள் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் ஆழமாக ஆராயப்பட்டது.

“ ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி வழங்கப்படாத போக்குவரத்து சேவைகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் விரைவில் முழுமையாக தடுப்பூசி வழங்கப்படும்”- என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Latest Articles