பாதீட்டில் காணி உரிமை வழங்க ஏற்பாடு – இதொகா தவிசாளர் வரவேற்பு!

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மலையக பெருந்தோட்ட மக்களுக்கென விசேடமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காணி உரிமை வழங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான முன்மொழிவுகளை நாம் வரவேற்கின்றோம் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், மேலும் கூறியதாவது ,

” நாட்டில் கடும் நெருக்கடி ஏற்பட்டிருந்த நிலையில், தான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு ஜனாதிபதி தீவிரமாக செயற்பட்டுவருகின்றார். பங்காளிக்கட்சி என்ற வகையில் நாமும் எமது திட்டங்களை முன்வைத்து ஆதரவு வழங்கிவருகின்றோம்.

இவ்வாறானதொரு பின்புலத்தில் அனைத்து தரப்புகளுக்கும் ஏதோவொரு வகையில் நிவாரணம் வழங்கும் வகையில் வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை நாம் வரவேற்கின்றோம்.

மலையகத்தைச் சேர்ந்த 89 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பத்து வருட பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டம் 2024 இல் ஆரம்பிக்கப்படும். அதற்காக 2024 ஆம் ஆண்டில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தை மையப்படுத்தி இரு பல்கலைக்கழகங்கள் வரவுள்ளன.

அதேபோல நுவரெலியா மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி உட்பட பல நல்ல விடயங்களும் உள்ளன. எமது பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அமைச்சரவையில் இருப்பதால் மலையகம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகின்றது. அவரது அமைச்சுக்கும் வழமையைவிட கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, அமைச்சரின் கரங்களை பலப்படுத்துவோம். மலையக மறுமலர்ச்சி என்ற இலக்கை அடைய இணைந்து பயணிப்போம். ஏதேனும் திருத்தம் செய்யப்ப வேண்டிய இருப்பின் அந்த யோசனையையும் காங்கிரஸ் முன்வைக்கும்.” – என்றார்.

Related Articles

Latest Articles