” எனக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்படுமானால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான உண்மைகளை உரிய விசாரணைகளைமூலம் வெளிக்கொணர முடியும்.”
இவ்வாறு கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சாரா தப்பியோட உதவினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸ் அதிகாரியொருவர் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னர் சாராவின் குரல் கேட்டதாக சஹ்ரானின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்துள்ளார்.
முதல் இரண்டு டிஎன்ஏ பரிசோதனைகளிலும் சாரா அங்கிருக்கவில்லை எனக் கூறப்பட்டது. ஆனால் தற்போது திடீரென அவர் உயிரிழந்துவிட்டாரென பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதை நம்ப முடியவில்லை. இதன் நோக்கம் என்னவென்று புரியவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு ‘ஸ்கொட்லேன்ட் யார்ட்’ வரவழைக்கப்படும் என ஜனாதிபதி கூறினார். அது இன்னும் நடக்கவில்லை.
எனக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்படுமானால் இச்சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை வழங்கப்படும். எனக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டால், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் எம்.பியொருவர், பதவி விலகி, நான் நாடாளுமன்றம்வர வாய்ப்பளிப்பார்.” – என்றார்.
