” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிவடையும்வரையிலானது தனது பதவியில் இருந்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர விலகி இருக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளித்த பின்னர், இதற்குரிய நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று அக்கடசியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் டைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெல்ல வைப்பதற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எம் வசம் இல்லாதபோதிலும், நீதிக்காக இப்பிரேரணை கொண்டுவரப்படுகின்றது. சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தபோதிலும் எமக்கு பெரும்பான்மை பலம் இருக்கவில்லை. எனினும், ரணில் ஆட்சியில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனவே, எமது நம்பிக்கையில்லாப் பிரேரணையை பரிசீலித்து அருண ஜயசேகரவை பதவி விலக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் விசாரணைகள் முடிவடையும்வரையிலாவது அவர் அப்பதவியில் இருக்க கூடாது.
அவரை பதவி நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காவிட்டால், பிரதி அமைச்சர் தாமாக முன்வந்து பதவி விலகாவிட்டால் அது பற்றி மக்கள் உரிய முடிவை எடுப்பார்கள்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்பட்டு, பிரதான சூத்திரதாரி பகிரங்கப்படுத்தப்படுவார் என அரசாங்கம் உறுதியளித்தது. அந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டும்.” – என்றார்.